Show all

ஐயப்பாடுகளுக்கிடமான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைதானா! நாட்டைஆளும், அரசை தேர்ந்தெடுக்கும், உன்னதமான பொறுப்பிற்கு

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ததன் மூலம் பாஜக நடுவண் அரசில் ஆட்சி அமைத்து விட்டதாக பிரபல மின்னணு தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பின்னர், உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் இந்த தில்லுமுல்லு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார்.

ராணுவத் தேவைக்காக பயன்படுத்தப்படும் அலைவரிசையை பாஜக பயன்படுத்தி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குள் ஊடுருவி இந்த தில்லுமுல்லுவை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய மின்னணு கழகத்தில் பணியாற்றியவர் சையத் சுஜா. வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான நான்  இந்த மோசடியை அம்பலப்படுத்தியதால் என்மீது தாக்குதல் நடத்தி பாஜகவினர் கொல்ல முயன்றனர் என்னும் ஒரு 'பகீர்' தகவலையும் சையத் சுஜா வெளியிட்டுள்ளார்.

இந்தத் தில்லுமுல்லு தொடர்பாக விரிவாக ஆராய்ந்து கட்டுரை எழுத முயன்றதால்தான் கர்நாடக மாநிலத்தில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் அடுத்த அதிர்ச்சிக் கருத்தை வெளியிட்டார். இந்த விவகாரத்தை தெரிந்து வைத்திருந்த நடுவண் அமைச்சர் கோபிநாத் முன்டேவும் கொல்லப்பட்டதாக நெஞ்சாங்குலையை நடுநடுங்க வைக்கிறார்.  

ஒரு கட்சி வேட்பாளருக்கு விழும் வாக்குகளை வேறொருவருக்கு விழுந்ததுபோல் பதிவாகச் செய்வது எப்படி? என்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி அண்மையில் லண்டனில் இருந்து காணொளி நேர்காணல் மூலம் செயல்முறை விளக்கத்தையும் சையத் சுஜா செய்து காட்டினார். 

இந்தச் செயல்முறை விளக்கத்தின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கபில் சிபல் அருகில் இருந்ததால் இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் பணியாற்றும் சையத் சுஜா அந்நாட்டு அரசிடம் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று அளித்துள்ள விளக்கத்தில், 'இந்த இயந்திரங்கள் அனைத்தும் மிகுந்த பாதுகாப்புடன் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. இயந்திரங்களுக்குள் யாரும் ஊடுருவி தில்லுமுல்லு செய்ய முடியாது. வாக்குப்பதிவு இயந்திரங்களை திறந்துதான் எதையும் செய்ய முடியும். அப்படி திறக்கப்பட்டால் எங்கள் அதிகாரிகள் அதை கண்டுபிடித்து விடுவார்கள் என தெரிவித்துள்ளது.

அதே சமயம், லண்டனில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவத்தில் எதிர்தரப்பாக மாறி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான செய்திகள் வெளியானதும் டெல்லியில் இன்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடுவண் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, 'காங்கிரஸ் கட்சியிடம் இதழியல் துறைசார்ந்த பலர் சிக்கியுள்ளனர். ஆட்சியில் இருந்து மோடியை அகற்ற வேண்டும் என்பதற்காக இந்த இதழியலாளர்கள் பாகிஸ்தானின் உதவியைக்கூட நாடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் மாநாட்டில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக பழையபடி வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும் என சில தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைப்பதற்காக எதிர்க்கட்சிகள் சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி  தெரிவித்தார்.

இந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் மனு சிங்வி, சமாஜ்வாடி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் சதீஷ் மிஷ்ரா, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐயத்திற்கிடமான வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு, சப்பைக் கட்டெல்லாம் கட்டி, பாகிஸ்தான் சதி என்றெல்லாம் நடுவண் அமைச்சர்கள் பேசுவதில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமான வாக்கெடுப்பில் உறுதியாக பாஜகவிற்கு ஆதாயம் இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதான உண்மையைப் போல் இருக்கிறது.

அதே சமயம், லண்டனில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவத்தில் எதிர்தரப்பாக மாறி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் விரும்பவில்லை என்பதும், எந்த வகையில் சேர்த்தி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,039.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.