Show all

முத்தலாக் விவகாரத்தில், பாஜகவிற்கு அஞ்சாமல் உண்மையை வெளிப்படுத்தியிருக்கும் அதிமுக

13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முத்தலாக் நடைமுறைக்கு எதிரான நடுவண் ஆளும் பாஜகவின் குற்றவியல் சட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, நடுவண் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து பாராளுமன்றத்தில் பேசினார்.

முத்தலாக் மசோதாவை நடுவண் அரசு பாராளுமன்றத்தில் இன்று அறிமுகம் செய்தது. இதன் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். பாராளுமன்றத்தில் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா பேசுகையில், பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இஸ்லாம் பெண்களுக்கு பல உரிமைகளை வழங்கியுள்ளது. ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இஸ்லாம் மார்க்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. யாரோ போராடி முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை வாங்கித்தரும் நிலையில் அந்த பெண்கள் கிடையாது. அதே சமூகம் மாறட்டும் எந்த சமூக மாற்றங்கள் என்றாலும் அதே சமூகத்தினரிடமிருந்தே வர வேண்டும். உதாரணத்திற்கு, தேவதாசி, உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தின் தீமைகளை நமது முன்னோர்கள் சிந்தித்தார்கள். அதன் விளைவாக அந்த வழக்கங்களை நீக்கும் முயற்சியை அதே சமூகம்தான் முன் எடுத்தது. எனவே அது வெற்றி பெற்றுள்ளது.

முத்தலாக் விசயத்திலும், தவறுகள் நடைபெறுமானால், முஸ்லிம் சட்ட வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும். முத்தலாக் சட்டம் என்பது ஷரியத் சட்டத்திற்கு எதிரானது. முத்தலாக் சட்டத்தால், இஸ்லாமிய பெண்களுக்கு தீமைதான். தலாக் செய்யும்போது ஒருமுறை கிடைக்கும் தீர்வுப் பணமும் இதனால் கிடைக்காது. இந்த சட்டம், முஸ்லிம் பெண்கள், ஆதரவற்றவர்களாக, தெருவில் பிச்சைக்காரர்களாக அலையும் நிலையை ஏற்படுத்தும். பாஜக தனது வகுப்புவாத அரசியலைச் செயல்படுத்த நினைக்கிறது. மும்முறை தலாக் கூறுவது தவறுதான். ஆனால் இதில் குற்;றவியல் பிரச்சினை எங்கிருந்து வருகிறது? முத்தலாக் மசோதாவில் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் விதிக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. இவ்வாறு அன்வர் ராஜா பேசினார்.

அதிமுக இரா.கி.நகர் சட்டமன்ற இடைத் தேர்தல் தோல்விக்கு பிறகு பாஜகவிடமிருந்து விலகியிருக்க முயற்சிகள் எடுத்து வருகிறது. பாஜகவோடு இனி கூட்டணியே கிடையாது என அமைச்சர் செல்லூர் ராஜு பேசியிருந்தார். இந்த நிலையில், பாராளுமன்றத்தில் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, நடுவண் அரசுக்கு எதிராக கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,650

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.