Show all

அவர் ஒரு கோழை! தலைமை அமைச்சருக்கு நெஞ்சுரம் இல்லை வைகோ கடுந்தாக்கு

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கருப்புக் கொடியை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் தலைமை அமைச்சருக்கு இல்லை. அவர் ஒரு கோழை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியது. தமிழகத்தை நாசகரமாக்கும் நியூட்ரினோ திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என மோடி நிர்பந்தித்து வருகிறார், பல நடைமுறைகளை நடுவண் அரசு வேண்டும் என்றே மாற்றியமைத்து எப்படியாவது நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது. 

ஒரு வேளை இந்தத் திட்டம் நிறைவேற்றப் படுமானால் தமிழகம் மற்றும் கேரளா இரண்டும் பாலைவனமாகும். தமிழகம் இதற்கு எக்காலத்திலும் அனுமதி வழங்க கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமையாது. உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் நடுவண் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு நியாயத்தை குழி தோண்டி புதைத்து விட்டார்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என ஒவ்வொரு திட்டமாக கொண்டு வந்து, தமிழகத்தை பஞ்ச பிரதேசமாக மாற்றிவிட்டு, அதானிக்கும், அம்பானிக்கும் தமிழகத்தை கூறுபோட்டு விற்று விட்டு, இங்குள்ள இறையாண்மையை சிதைத்து ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை இங்கு நிலை நாட்டுவதே பாஜக அரசின் நோக்கம்.

தமிழக அரசு சார்பில் வாதாடும் உச்சஅறங்கூற்றுமன்ற வழக்கறிஞர் சேகர் நாப்தே, மேலாண்மை வாரியம் பற்றி பேசும்போது அதை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என எச்சரிக்கும் அவர், நடுவண் அரசு மீது பொய் கோவம் காட்டி விட்டு, அவர்கள் உத்தரவை செயல்படுத்தி வருகிறார் தலைமை அறங்கூற்றுவர்.

தமிழகத்தின் வாழ்வுரிமையை புதைத்துவிட்டு, அனைத்து கட்சி கூட்டம் போட்டு தலைமை அமைச்சரைப் பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டதற்கு மறுத்துவிட்டு தற்போது ராணுவ கண்காட்சி என்ற பெயரில் மோடி தமிழகம் வருவது நியாயமற்றது.

நரேந்திர மோடி ஒரு கோழை, வான் வழியை தவிர்த்து விட்டு சாலையில் பயணித்து கருப்பு கொடியை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் தலைமை அமைச்சருக்கு இல்லை. மோடி அடையார் புற்றுநோய் கல்லூரிக்குப் போகும் வழியில் உள்ள சின்னமலை பகுதியில் என் தலைமையில் கருப்புக்கொடி காட்டப்படும்.

நேற்று ஐ.பி.எல்லுக்கு எதிரான போட்டியில் காவல்துறை தடியடி கண்டிக்கத்தக்கது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,754.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.