Show all

தமிழகத்துக்குத் தரவேண்டிய காவிரி நீரைப்பெற தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்துக்குத் தரவேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட மறுக்கிறது. இதனால் தமிழகத்துக்குத் தரவேண்டிய 50 டி.எம்.சி நீரை திறந்து விடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு யு லலித் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் தண்ணீர் இன்றி கஷ்டப்படும்போது அண்டை மாநிலம் என்ற முறையில் கர்நாடக அரசு ஏன் உதவக்கூடாது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கர்நாடக அரசு வழக்கறிஞர், பருவமழை குறைந்த அளவே பொழிந்ததால் கர்நாடகாவின் தேவைக்கே தண்ணீர் இல்லை என்று வாதிட்டார். கர்நாடக அரசின் பதிலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், “வாழு வாழவிடு என்ற ரீதியில் கர்நாடக அரசு காவிரி நீர் பிரச்சினையை அணுக வேண்டும். தமிழகத்திற்குத் தரவேண்டிய 50 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு ஏன் திறந்து விடக்கூடாது?” என்று கேட்டனர். மேலும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்திற்கு ஏன் காவிரி நீரைத் திறந்து விடவில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறந்து விட முடியும்? என்ற விவரங்களை தாக்கல் செய்திட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். கர்நாடக அரசு இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க தமிழக அரசு அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.