Show all

உறுதியான போராட்டம்! 'ரபேல் ஊழல் தலைமைஅமைச்சர்' மோடி பதவிவிலக மகாராஷ்டிரா காங்கிரஸ் வியாழன் ஆர்ப்பாட்டம்

06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக தலைமைஅமைச்சர் மோடி பதவி விலக வேண்டும் என மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் வரும் வியாழனன்று மாபெரும் போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது

இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மோடி அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. அதில் போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், அம்பானிக்காக மோடி மக்களையும், ராணுவத்தையும் ஏமாற்றி விட்டதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. 

ரபேல் ஒப்பந்தத்தில், இந்திய அரசின் வற்புறுத்தலினாலேயே ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டதாக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக தலைமை அமைச்சர் மோடியும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் வியாழக் கிழமையன்று காங்கிரஸ் தலைமையில் மகாராஷ்டிராவில் மாபெரும் பேரணி நடைபெறும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஷோக் சவான் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில், தலைமைஅமைச்சர் மோடிக்கு நண்பரின் தொழில் மீது இருக்கும் ஆர்வம் நாட்டின் மீது இல்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் செய்து மக்களின் நம்பிக்கையை ஏமாற்றியும், அவர்களை தவறான வழியில் வழிநடத்தியும் வரும் தலைமைஅமைச்சர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,918.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.