Show all

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கடுங்கோபம்! வீட்டுக்குள் இருங்க, இல்லைன்னா கண்டதும் சுட உத்தரவுதான்


ஓயாமல் குறும்பு செய்யும் குழந்தைகளைக் கண்ணை மூடிக்கொண்டு அடித்துவிடும் தாயின் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன மாநில அரசுகள்- கொரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்காத மக்களால்.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனாவுக்கான ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீடுகளில்தான் முடங்கி இருக்க வேண்டும்; வீதிகளில் நடமாடினால் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்க நேரிடும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.

கொரோனா தாக்கத்தால் தெலுங்கானாவிலும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் தொடருவதால் மாநில அரசு கடும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது:

அமெரிக்காவைப் போல சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை ராணுவத்திடம் கொடுத்துவிடுவோம். பொதுமக்களில் பலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வீதிகளில் நடமாடுவதையும் பார்க்க முடிகிறது. 

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்களது எல்லைக்கடவை ஒப்படைத்துவிட வேண்டும். 14 நாட்கள் கண்காணிப்பில் அவர்கள் இருந்துதான் ஆக வேண்டும்.

ஊரடங்கு சட்டங்களை மீறுகிறவர்களுக்கு சில நாடுகளில் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. ஆகையால் பொதுமக்கள்தான்- வீடுகளில் இருக்க வேண்டுமா? சிறைக்கு போக வேண்டுமா? என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். சட்டங்களை மீறி வீதிகளில் நடமாடினால் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கவும் நேரிடும். இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.