Show all

ஆய்வு செய்து அங்கிகாரம் கொடுக்க வேண்டியதுதானே! 277 அங்கிகாரம் பெறாத பொறியியல் கல்லூரிகள் செயல்படுவதாக நடுவண் அரசு தெரிவிக்கிறது

18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்றத்தில் நடுவண் மனித வளத்துறை அமைச்சகம் சார்பில் பதிகை செய்யப்பட்ட அறிக்கையில், நாட்டில் மொத்தம் 277 அரசுஅங்கிகாரம் பெறாத பொறியியல் கல்லூரிகள் செயல்படுவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதிகமாக டில்லி - 66, தெலுங்கானா - 35, மேற்கு வங்கம் - 27, கர்நாடகா-23, உத்தரப் பிரதேசம் - 22, இமாச்சல பிரதேசம்- 18, பீஹார்-17, மஹாராஷ்டிரா- 16, தமிழகம்- 11, குஜராத்- 8, ஆந்திரா- 7, பஞ்சாப் - 5, உத்தரகாண்ட், ராஜஸ்தான்- தலா 3 என அரசுஅங்கிகாரம் பெறாத கல்லூரிகள் செயல்படுகின்றன.

இது குறித்து அகில இந்திய தொழிற்கல்வி குழு தலைவர் அனில் சஹஸ்ரபுதே கூறுகையில், இந்தக் கல்லூரிகளுக்கு அடிப்படை அங்கீகாரம் ஏதுவும் அளிக்கப்படவில்லை. இந்த நிறுவனங்கள் அளிக்கும், பட்டயம், பட்ட சான்றிதழ் உள்ளிட்டவை செல்லுபடியாகாது. எந்த நிறுவனங்களும் ஒத்து கொள்ளாது இவ்வாறு அவர் கூறினார்.

அறிக்கை வெளியிட்டு விட்டு தங்கள் பொறுப்பு முடிந்து விட்டதாக நடுவண் அரசு தப்பித்துக் கொள்ளக் கூடாது. அந்தக் கல்லூரிகளுக்கு உரியவகையில் உரியதுறைகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு அதில் பயிலும் மாணவர்களின் ஒரேயொரு ஆண்டு கூட பாதித்து விடாமல் உண்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,868.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.