Show all

செம்மர கடத்தல் வழக்குகளின் பின்னணி

ஆந்திராவில் செம்மரம் வெட்டச்சென்றதாக கூறி தமிழக கூலித் தொழிலாளிகள் அடிக்கடி  கைது செய்யப்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது.

     ஆந்திர அரசின் தமிழர் விரோத போக்கின் பின்னால் வனத்துறை அதிகாரிகள் இருவர் உயிரிழந்த கதையும் இருக்கிறது.

     திருப்பதி அருகே, வனப்பகுதியில் செம்மர கடத்தல் கும்பலால் வனத்துறை அதிகாரிகள் டேவிட் கருணாகர் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் 2013, டிசம்பர் 15-ம் தேதி கொலை செய்யப்பட்டனர்.

     இந்தக் கொலை வழக்கில் ஆந்திர காவல்;துறையினர், அவசர அவசரமாக  454 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் 349 பேர் அதே அவசர கதியில் நீதிமன்றத்தில்  அணியப்படுத்தப்பட்டனர். அப்படி அணியப்படுத்தப்பட்ட 349 பேரில் 287 பேர் தமிழர்கள்.

     இது தவிர தலைமறைவு குற்றவாளி பட்டியலில் உள்ளவர்கள் என்று  82 தமிழ்ப்பெயர்களையும் ஆந்திர காவல்துறையினர் காவல்நிலைய பதிவேடுகளில் எழுதி வைத்துக் கொண்டனர். கடந்த நான்காண்டு காலமாகவே செம்மரக்கட்டை தொடர்பான வழக்கில் ஆட்களை கைது செய்ய அதே 82 தமிழ்ப் பெயர்களைத்தான் ஆந்திர காவல்துறையினர் பயன்படுத்துவதாக அம்மாநில சமூகநல அமைப்புகளே குற்றஞ்சாட்டி வந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தமிழகத்தை சேர்ந்த 287 பேர் உட்பட  விசாரணை கைதிகளாக  சிறையில் இருக்கும் 349 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று திருப்பதி சிறப்பு நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது.

     வனத்துறை அதிகாரிகளைக் கொலை செய்த வழக்கில்  ஆந்திர காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 349 பேரில் 65 பேர்  மட்டுமே ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இவர்களை மட்டும் இந்த வழக்கிலிருந்து பிணையில் விடுதலையாக ஆந்திர காவல்துறையினர் சம்மதித்தனர். வழக்கில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை பிணையில் அனுப்பி வைக்க ஆந்திர காவல்துறை அனுமதிக்கவில்லை. விசாரணை காலமான இரண்டாண்டு காலமும் தமிழர்கள் சிறையிலேயே கொடுமையை அனுபவித்து வந்தனர். நீதிமன்றத்தில் தீர்ப்பு நாளன்று நீதிஅரசர்கள்,

‘குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பிணையல் கேட்கும்போது எந்த மறுப்பும் ஏன் நீங்கள் தெரிவிக்க வில்லை? அப்படியென்றால் இந்த 349 பேரை  மட்டும் முழுமையாக விசாரித்து முடித்து விட்டீர்களா? அப்படியென்றால், மற்றவர்கள் குற்றவாளிகளா’ என்று கேள்விகளாக அடுக்கவே தலைகுனிந்து நின்றது, ஆந்திர காவல்துறை.

     வனத்துறை அதிகாரிகள் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை விரைவில் கைது செய்யப் பாருங்கள்

என்றும் ஆந்திர காவல்துறையை, திருப்பதி சிறப்பு நீதிமன்றம் கொட்டியது.

இரண்டாண்டு சிறைவாசத்தில் 5 தமிழர்கள் சிறையிலேயே உயிரிழந்த கொடுமையும் நடந்து முடிந்தது. கொலைக்கு தொடர்பில்லாத ஆட்களை நீதிமன்றத்தில் கணக்குக் காட்டி வழக்கை முடிக்க நினைத்த ஆந்திர காவல்துறையினருக்கு  நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நாள் முதல் தமிழர்களை பொய்வழக்கில் கைது செய்யும் வேலையில் இறங்கி விட்டது. செம்மரக்கடத்தல், செம்மரம் வெட்டல் என்று  பொய்-பொய்யாய் தமிழர்கள் மீது குற்றங்களை அடுக்கும் ஆந்திர காவல்துறையினரின உண்மைமுகத்தை, வெளிச்சத்துக்கு கொண்டுவர-

தேவை! தெளிவான ஒரு இருமாநில கலந்தாய்வு.   அதை விடுத்து, ‘எங்காளுங்க தவறு செய்து விட்டார்கள், அவர்களை மன்னித்து விட்டு விடுங்கள்’

என்று ஆந்திர அரசிடம் தமிழக அரசு மூன்று மாதத்துக்கு ஒருமுறை ஒப்பாரி வைப்பது வெட்கக் கேடு!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.