Show all

கிறிஸ்துமஸ் கொண்டாடும் தைரியம் எங்களுக்கு இருக்கிறது: கிறித்துவப் பள்ளிகள் அதிரடி

04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தர பிரதேசத்தின் அலிகார் பகுதியில் இருக்கும் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட கூடாது என இந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. ‘தி ஹிந்து ஜக்ரான் மார்ச் என்ற அந்த அமைப்பு பள்ளிகளுக்கு இதுகுறித்து கடிதம் எழுதி இருக்கிறது.

இந்த கடிதத்தில் தைரியம் இருந்தால் கிறிஸ்துமஸ் நடத்தி பாருங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த கடிதம் பள்ளிகளுக்கு மட்டும் இல்லாமல் சில கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது.

 

இந்தச் சம்பவம் தற்போது உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த எச்சரிக்கையால் சில பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாடாமல் விடப் போவதாக கூறப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் ‘தி ஹிந்து ஜக்ரான் மார்ச் என்ற அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. விஸ்வ ஹிந்து பரிஷித் அமைப்பின் துணை அமைப்பான இது தற்போது ‘அலிகார் நகரத்தில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் கடிதம் அனுப்பி இருக்கிறது. அதில் எந்த கல்வி நிறுவனமும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடக்கூடாது என்று குறிப்பிட்டு இருக்கிறது.

மேலும் இந்த கடிதத்தில் ‘உங்களுக்கு தைரியம் இருந்தால் தாராளமாக கிறிஸ்துமஸ் பண்டிகை நடத்திக் கொள்ளலாம். ஆனால் உங்களது பள்ளிக்கும் கல்லூரிக்கும் ஏதாவது அசாம்பாவிதம் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இந்த கடிதத்திற்கு பின்பும் நடந்தால் கண்டிப்பாக பெரிய பிரச்சனை வரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்தக் கடிதம் கிறிஸ்துவ பள்ளிகளைக் குறிவைத்து அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த கடிதம் எவ்வளவு சீக்கிரம் அவர்களை அடைய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்களை அடைய வேண்டும். எந்த பள்ளியும் அந்நிய நாட்டு விழாக்களை இந்த பூமியில் கொண்டாட கூடாது. இந்த கடிதம் அவர்களுக்கு பெரிய எச்சரிக்கை மணி என்று அந்த அமைப்பின் தலைவர் குறிப்பிட்டு உள்ளார்.

தற்போது இந்தக் கடிதம் குறித்து பள்ளிகள் விளக்கம் அளித்து இருக்கின்றன. அதில் ‘இதுபோன்ற கடிதங்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் கண்டிப்பாக கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம். சில பள்ளிகள் பயந்து இருக்கின்றன. அவர்களிடமும் நாங்கள் பேசுவோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,641

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.