Show all

காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில், உச்ச அறங்கூற்று மன்றத் தீர்ப்பின் 10 முதன்மையான அம்சங்கள்

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் கர்நாடகம் இடையேயான காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் இன்று உச்ச அறங்கூற்று மன்றம் அளித்த தீர்ப்பின் 10 முதன்மையான அம்சங்கள்.

1. இரு மாநிலங்களுக்கு இடையே பாய்ந்தோடும் நதிகள் அனைத்திற்கும் எந்த மாநிலமும் முழு உரிமை கோர முடியாது. அவை தேசிய சொத்தாகும்.

2. காவிரி நீரை இரு மாநிலங்களும் தகுந்த முறையில் பிரித்துக்கொள்வதே சரியானதாக இருக்கும்.

3. தமிழகத்துக்கு காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்த 192 டிஎம்சி தண்ணீரில் 177.25 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கப்படும்.

4. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 270 டி எம் சி தண்ணீரோடு, 14.75 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக வழங்கப்படும்.

5. இந்த 14.75 டிஎம்சி நீரில் 4.75 டிஎம்சி நீர் பெங்களூர் நகரின் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக ஒதுக்கப்படுகிறது.

6. நடுவண் அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

7. கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மாற்றமில்லை.

8. காவிரி நீர் தொடர்பாக மைசூர் அரசுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 1892லும் 1924லும் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லும்.

9. தமிழ்நாட்டில் நிலத்துக்கு அடியில் சுமார் 20 டிஎம்சி நீர் இருப்பதை காவிரி நடுவர் மன்றம் கணக்கில் எடுத்துகொள்ளவில்லை.

10. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பற்றி மேல்முறையீடு செய்ய முடியாது.

இது தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு அன்று. ஆனால் இந்தத் தீர்ப்பைக் கூட நடுவண் அரசும், கருநாடக அரசும் செயல் படுத்தும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 

கருநாடக அரசைப் பொறுத்த வரை, கூடுதலாக தண்ணீர் வந்தால், தமிழகம் எப்படிப் போனால் என்ன என்று எல்லாவற்றையும், திறந்து விட்டு விடுவோம்; தண்ணீர் வரவில்லையா முழுக் கொள்ளளவு சேமிப்பில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட தரமாட்டோம் என்பதுதாம் அதன் நிலை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,700

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.