Show all

தலித் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்.

ஹரியாணா மாநிலத்தில் உயர் வகுப்பினர், தலித் குடும்பத்தின் வீட்டுக்குத் தீ வைத்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பான சம்பவத்தில், சிபிஐ 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

ஹரியாணா மாநிலம் பரிதாபாத் அருகே, சன்பெட் கிராமத்தில் ஜிதேந்தர்(31) என்ற தலித் வீட்டுக்கு ராஜ்புத் இனத்தைச் சேர்ந்த சிலர் கடந்த 20-ம் தேதி அதிகாலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வீட்டின் கதவு வெளியே தாழிடப்பட்டதால்,

இரண்டரை வயது வைபவ் என்ற குழந்தையும், 11 மாத திவ்யா என்ற குழந்தையும் உடல் கருகி உயிரிழந்தனர். ஜிதேந்தரின் மனைவி ரேகா (28) படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஜிதேந்தருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் காவல் துறையினர் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இருப்பினும் இச்சம்பவத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்ததையடுத்து, ஹரியாணா அரசு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதனிடையே இச்சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள 11 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், சம்பவ இடத்துக்குச் சென்ற சிபிஐகுழு தடயங்களைச் சேகரித்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.