Show all

குறிஞ்சி மலரை பிரசவித்தார்! வழக்கமாக புஸ்வானங்களையே கொழுத்திப் போடும் சுப்பரமணியசாமி; எடுபடுமா?

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டில் வளர்ச்சி வேண்டுமானால், நாட்டு மக்கள் அனைவருக்கும் வருமான வரியை ரத்து செய்து, நடுத்தர மக்களின் சேமிப்பை உயர்த்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரில் இந்திய தொழில்துறை அமைப்பின் 8-வது மாநாடு இன்று நடந்தது. இதில் வளர்ந்து வரும் உலகில் இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பேசியதாவது:

'நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க முதலீடுகள் மிகவும் அவசியமாகும். முதலீடுகள் உருவாக வேண்டுமானால், மக்களிடம் சேமிப்பு இருக்க வேண்டும். சேமிப்பு இருந்தால்தான் மக்கள் தங்கள் பணத்தை வங்கியில் முதலீடு செய்வார்கள். அதன் மூலம் வங்கிகள் முதலீட்டாளர்களுக்குக் கடன் கொடுத்து பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவர முடியும்.

ஆனால், நடுவண் அரசு நடுத்தர வர்க்கத்தினர் மீது கடுமையான வருமான வரியைச் சுமத்தி அவர்களைக் கொடுமைப்படுத்துகிறது. இதனால், நடுத்தர குடும்பத்து மக்கள் தங்களின் சம்பாத்தியத்தில் ஒருபகுதியை வரியாகச் செலுத்தி பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நாட்டில் வருமான வரி யார் செலுத்துகிறார்கள்? மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்களே வருமான வரி செலுத்துகிறார்கள். பின் எதற்காக அந்தக் குறிப்பிட்ட சிறிய பிரிவு மக்களின் மீது வருமானவரி எனும் சுமையை ஏற்றுகிறது நடுவண் அரசு.

நடுத்தர குடும்பத்தினர் மட்டுமல்லாது அனைவருக்கும் வருமான வரியை ரத்து செய்யும் போது, அவர்களின் சேமிப்பு அதிகரிக்கும். அந்த சேமிப்பு முதலீடாக மாறும்.

வருமான வரியை ரத்து செய்வதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தை மக்கள் முதலீடாக மாற்றுவார்கள். முதலீடு அதிகரிக்கும் போது, இயல்பாக பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். வருமான வரியை ரத்து செய்துவிடுங்கள். அதைக் காட்டிலும் மறைமுக வரி அதிகமான வருவாயை அரசுக்கு ஈட்டிக்கொடுக்கும்.

வருமான வரியை ரத்து செய்வதன் மூலம் அரசுக்கு வரும் இழப்பீட்டை இயற்கை வளங்களை ஏலம் விட்டு அதன் மூலம் ஈடுசெய்ய வேண்டும். குறிப்பாக நிலக்கரி சுரங்கங்கள், அலைக்கற்றை ஏலத்தில் அதிகமாக வருமானம் ஈட்ட முடியும். 2ஜி, 3ஜி, 4ஜி. 5ஜி ஆகியவற்றை ஏலத்தில் விடுங்கள் என்று நீண்டகாலமாக நான் கூறிக்கொண்டு இருக்கிறேன். நிலக்கரி சுரங்கங்களையும் அரசு முறையாக ஏலத்தில் விட வேண்டும். நாட்டில் வேலைவாய்ப்புக்கும், ஏழ்மைக்கும் தீர்வு கண்டால், அடுத்த 10 ஆண்டுகளில் 10 விழுக்hடு வளர்ச்சியை நாடு பெறும். இது சாத்தியமானது, உறுதியாக எட்டக்கூடியது.

இளைஞர்களின் மனதில் புத்தாக்கச் சிந்தனையும், கண்டுபிடிப்புகளும் அதிகம் எழ வேண்டும், அதற்கான மாற்றம் மனதில் உருவாக வேண்டும். தங்கள் வாழ்க்கையை நிலைப்படுத்துவதற்குப் பதிலாக, இடர்ப்பாடுகளைப் பற்றி சிந்தித்து வருகிறார்கள்.' இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர் பூப்பதைப் போல பிரசவித்திருக்கிறார் குறிஞ்சிமலரை. எடுபட வேண்டுமே என்பதுதான் நம் கவலை!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,785.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.