Show all

அமிர்தசரஸ் தொடர்வண்டி விபத்து! தன்னிலை மறந்த விழாக் கொண்டாட்டம், திண்டாட்டமானது

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்றோடு முடிந்த பத்து நாட்கள் விழா, இந்தியா முழுவதும் கொண்டாடப் பட்டாலும் கொண்டாடப் படும் விதமும், கொண்டாட்டத்திற்கான காரணமும் வேறு வேறாக இருக்கின்றன. 

தமிழகம் தவிர்த்த, தென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஓர் அங்கமாகவும் வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது. புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விழா நிறைவடைகிறது. முந்தைய ஒன்பது நாட்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

இவ்விழா மகிசாசுரனை சக்தி வென்ற நாளாக கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மைசூரில் மன்னராட்சி நடந்தபோது இந்த நாளில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது மன்னர் ஊர்வலம் வருவது தசரா ஊர்வலம் என அழைக்கப்பட்டது. இதனையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அந்த வழக்கத்தை மன்னராட்சி முடிந்த பின்னரும், தற்போதும் கடைபிடித்து வருகின்றனர்.

வட இந்தியப் பகுதிகளில் இராமன் இராவணனைக் கொன்ற நாளாக ராம்லீலா என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. பெருந்திரளான மக்கள் திடலில் கூடி இராவணன் மற்றும் அவனது சுற்றத்தினரது உருவபொம்மையை இராமர் வேடம் தரித்தவரால் அம்பெய்யப்பட்டு எரியூட்டப்படுகிறது.

தமிழ்நாட்டில் பொருளாதாரம், கல்வி, கருவிகள் எனும் மனிதனின் மூன்று அடிப்படைத் தேவைகளை: அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய மூன்று தெய்வ வழிபாடுகளை நிகழ்த்துகிற கொண்டாட்டமாக விழா கொண்டாடப் படுகிறது. செல்வம், கல்வி, வீரம் மூன்றும் மூன்று வகையான அடிப்படை ஆற்றல்கள். செல்வத்தால்- கல்வியும், கருவியும்; பெற முடியும். கல்வியால்- கருவியும் செல்வமும் பெற முடியும். கருவியால்- கல்வியும், செல்வமும் பெற முடியும். மூன்றும் ஒவ்வொன்றுக்கு ஒன்று சளைத்தல்ல ; மூன்றுமே மனிதனுக்குத் தேவைதான் என்ற வகையாக நெடுங்காலமாகப் போற்றிக் கொள்ளப் பட்டு வருகிறது.  

அமிர்தசரசில் இந்தக் கொண்டாட்டத்தின் போது இருப்புப் பாதை தண்டவாளத்தின் மீது நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த தொடர்வண்டி மோதியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 50 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கோர விபத்திற்கு காரணம், மக்களின் தம்பட மோகம் தான் என தெரிய வந்துள்ளது.

வடஇந்தியாவில், இந்தத் தசரா கொண்டாட்டத்தில் ராவணனின் உருவ பொம்பை எரிக்கப்பட்ட போது, தொடர்வண்டி வருவதை கண்டு கொள்ளாமல் ஏராளமானோர் தண்டவாளத்தின் மீது நின்று அதனை தங்களின் செல்பேசியில் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். ஏராளமானோர் தம்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இவை விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகளில் பதிவாகி உள்ளன.

தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது தொடர்வண்டி மோதி விட்டு சென்ற பிறகும் பலர் எவ்வித பதற்றமும் இன்றி தொடர்ந்து தங்களின் செல்பேசிகளில், விபத்து நடந்த காட்சிகளை படம்பிடித்துக் கொண்டிருந்தனர். இதற்கு பலரும் கண்டனமும், வேதனையும் தெரிவித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,946.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.