Show all

அமித்ஷாவை பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து நீக்க எதிர்கட்சிகள் போர்க்கொடி

இன்று 24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா நடத்தி வரும் நிறுவனம் நட்டத்தில் செயல்பட்டு வந்த நிலையில் ஒரு ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு அதிக வருவாயை ஈட்டி உள்ளது.

ஆட்சி அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி இவ்வாறு லாபம் பெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது சம்பந்தமாக பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

இது சம்பந்தமாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மேலவை காங்கிரஸ் துணை தலைவருமான ஆனந்த் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:

அமித்ஷா மகன் விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கும் நோக்கம் என்ன? பிரதமர் மோடி எதற்கெடுத்தாலும் நிறைய பேசுவார். ஆனால், இந்த விவகாரத்தில் மட்டும் வாய் திறக்காமல் இருப்பது ஏன்?

அமித்ஷா மகன் மீது புகார் கூறியதற்கு நடுவண் அமைச்சர் பியூஸ் கோயல் பதில் அளித்துள்ளார். அவர் அமித்ஷா மகன் நிறுவனத்தின் வர்த்தக மேலாளராக? அல்லது செய்தி தொடர்பாளரா?

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுவரை அமித் ஷாவை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கி வைக்க வேண்டும்.

 

கடந்த காலங்களில் அத்வானி, நிதின் கட்காரி போன்றவர்கள் தங்கள் மீது புகார் வந்த போது பதவியில் இருந்து விலகினார்கள். அதேபோல் அமித்ஷாவும் விலக வேண்டும்.

இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார்.

காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சூரஜ்வாலா நிருபர்களிடம் கூறியதாவது:

அமித்ஷா மகன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து 2 அறங்கூற்றுவர்கள் மூலம் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

அந்த விசாரணை முடியும் வரை அமித்ஷாவை தலைவர் பதவியில் இருந்து நீக்கி வைக்க வேண்டும். இது, மோடிக்கு கடினமாகத்தான் இருக்கும். பிரதமர் தனது நட்புக்காக செயல்பட போகிறாரா? அல்லது நயன்மைக்காக செயல்பட போகிறாரா? என்பதை நாடே எதிர்பார்க்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.