Show all

பாஜகவின் அடுத்த அடாவடி! ஆடுதாண்டும் காவிரியில் கண்டிப்பாக அணை கட்டுவாராம் எடியூரப்பா

ஆடுதாண்டும் காவிரியில் கண்டிப்பாக புதிய அணை கட்டப்படும் என்று கர்நாடக மேலவையில் புதிய முதல் அமைச்சர் எடியூரப்பா உறுதி அளிப்பாம்; நடுவண் பாஜக அரசின் ஒப்புதலோடாம்.

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  கர்நாடக மேலவையில் நிதி சட்டமுன்வரைவை பதிகை செய்து ஒப்புதல் பெற்ற பிறகு முதல் அமைச்சர் எடியூரப்பா கிருஷ்ணா மேல்-அணை திட்டத்தை நிறைவேற்ற நரேந்திர மோடியிடம் நிதியுதவி கேட்பேன் என்று தெரிவித்தார்.

இந்த வேளையில் அவையின் உறுப்பினர், கிருஷ்ணா மற்றும் காவிரி நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு எடியூரப்பா பதில் அளித்து பேசியதாவது:

மராட்டியத்தில் பா.ஜனதா அரசு ஆட்சி செய்கிறது. இதனால் கிருஷ்ணா மேல்-அணை தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்யப்படும். ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்ட நடுவண் அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.

நடுவண் அரசின் அனுமதியுடன் ஆடுதாண்டும் காவிரியில் அணை கண்டிப்பாக கட்டப்படும். இதில் இருந்து பின்வாங்க மாட்டோம். இதற்காக நிதி ஒதுக்கப்படும். ஆடுதாண்டும் காவிரியில் அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் நரேந்திர மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். 

ஏற்கனவே முந்தைய சித்தராமையா தலைமையிலான அரசும், குமாரசாமி தலைமையில் செயல்பட்ட காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அரசும் ரூ.5,912 கோடி மதிப்பீட்டில் ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்ட தீவிர முயற்சி எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,229.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.