Show all

வெள்ளை நிற ராவணன் உருவபொம்மையால் மோதலில் 35 பேர் காயம்

பஞ்சாப் மாநிலத்தில் தசரா விழாவிற்காக வெள்ளை நிறத்தில் ராவணன் உருவ பொம்மை செய்ததால் இரு கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலில் 35 பேர் காயமடைந்தனர். வடமாநிலங்களில் ஆண்டுதோறும் தசரா விழாவை கொண்டாடும் மக்கள் ‘ராவணவதம்’ என்ற பெயரில் ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதன் ஆகியோரின் உருவபொம்மைகளை தீயிட்டு எரிப்பது வழக்கம். அவ்வகையில், தசரா திருநாளான இன்று நாடு முழுவதும் “ராவணவதம்” நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதற்காக விதவிதமாக உருவ பொம்மைகள் செய்து தீயிட்டு கொளுத்தினர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ராவணன் உருவ பொம்மையால் இரு கட்சிகளிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக ராவணன் உருவபொம்மையானது தடிமனான கருப்பு நிற காகிதத்தால் சுற்றப்பட்டு வண்ணம் தீட்டப்படும். ஆனால், லூதியானாவில் காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட உருவ பொம்மையானது, ஹெராயின் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளை நிற காகிதம் சுற்றப்பட்டிருந்ததாக தெரிகிறது. மேலும், இந்த உருவ பொம்மையுடன் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோரின் உருவ படங்களை எரிக்கவும் திட்டமிட்டதால் காங்கிரசாருக்கும், ஆளும் அகாலி தளம் கட்சியினருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த மோதலில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் குர்பிரீத் கோகி உள்பட 35 பேர் காயமடைந்தனர். காங்கிரசாரின் ராவணன் உருவபொம்மை சேதப்படுத்தப்பட்டது. காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாகனத்தையும் சேதப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.