Show all

வலி நிவாரணி உள்ளிட்ட 344 மருந்துகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை

வலி நிவாரணி உள்ளிட்ட 344 மருந்துகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடைவிதித்து நடுவண் அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வலி நிவாரணி, சளி, இருமலுக்கான மருந்துகள், நோய் எதிர்ப்புக்கான மருந்துகள், குறிப்பிட்ட சர்க்கரை நோய் மருந்துகள், சிகிச்சைக்கு உரியதாக இல்லாத மருந்துகள், குறிப்பிட்ட மருந்தினால் எவ்வித பயனும் இல்லாத மருந்துகள், ஒன்றுக்கு மேற்பட்ட மூலக்கூறுகளை கொண்ட மருந்துகள் என்று 344 மருந்துகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதித்து கடந்த 10-ந் தேதி நடுவண் அரசு, அரசாணை வெளியிட்டது.

 

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்னிந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கு மனுவில்,

‘மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம், புழக்கத்தில் உள்ள 344 மருந்துகளை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்றும், இந்த மருந்துகளுக்கு தடை விதித்தும் அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளை 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முறையான ஆய்வுகளையும், விசாரணையையும் மேற்கொள்ளாமல் ஒரே நாளில் இந்த மருந்துகளுக்குத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதனால் எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. நடுவண் அரசின் இந்த உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

 

நடுவண் அரசின் இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நடுவண் அரசின் உத்தரவுக்கு தடைவிதித்து இருப்பதாகவும், மருந்து உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மேலும், பல ஆண்டுகளாக இந்த மருந்துப் பொருட்களை விற்பனை செய்வதால், அதை தொடர்ந்து விற்பனை செய்யலாம் என்றும் உத்தரவிட முடியாது. ஏன் என்றால், மருந்து துறையைச் சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து பரிசீலித்து உள்ளனர். அதேநேரம், இந்த மருந்துப் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கு முன்பு சட்டப்படியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு உள்ளதா? என்பதை இந்த வழக்கின் விசாரணையின் மூலம் முடிவு செய்து கொள்ளவேண்டும்.

 

இந்த விவகாரம் மிகப்பெரிய சமுதாயப் பிரச்சினை தொடர்பானவை என்பதால், நடுவண் அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது.

 

 

அதேநேரம், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, தடை செய்யப்பட்ட மருந்து பொருட்களை இருப்பு வைத்திருக்கும் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எதுவும் நடுவண் அரசு எடுக்கக்கூடாது என்று உத்தரவிடுகிறோம். இந்த வழக்கில் வருகிற ஜூன் 2-ந் தேதிக்குள் நடுவண், மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். நடுவண் அரசின் உத்தரவுக்கு தடை கேட்ட இடைக்கால மனுவை பைசல் செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறி உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.