Show all

சகாரா நிறுவனம் உங்களுக்கு வழங்கிய 10 பைகளில் என்ன இருந்தன? மோடிக்கு ராகுல் கேள்வி

குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த போது சகாரா நிறுவனம் வழங்கிய 10 பைகளில் என்ன இருந்தன? என ராகுல் காந்தி மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார்.

     குஜராத் முதல்வராக பதவி வகித்த போது மோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, சகாரா நிறுவனம் கடந்த 2013-14-ம் ஆண்டு காலகட்டத்தில் வழங்கிய 10 பைகளில் என்ன இருந்தன? என மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார்.

     பிரதமர் நரேந்திர மோடியின் கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை மற்றும் ரூபாய் நோட்டு திரும்பப் பெறல் திட்டங்களைக் கடுமையாக எதிர்த்து வரும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இது தொடர்பாக பிரதமர் கருப்புப் பணம் எதிர்ப்பு என்கிற தலைப்பிற்கெல்லாம் தகுதியில்லாதர் என்று குறை கூறி வருகிறார். இதில் பிரதமர் தனிப்பட்ட முறையில் ஊழல் புரிந்ததாக கூறிய அவர், குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த போது ரூ.65 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டை வீசியுள்ளார்.

     இது தொடர்பாக குஜராத்தின் மெக்சானா பகுதியில் நேற்று முன்தினம் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது அவர் கூறுகையில், 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் சகாரா நிறுவனம் மோடிக்கு 9 முறை பணம் கொடுத்ததாகவும், இதைப்போல பிர்லா நிறுவனத்திடம் இருந்தும் அவர் பணம் பெற்றதாகவும் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

     ஆனால் இதற்கு விடையளிக்க முயலாமல் மோடி, ராகுல் காந்தி இப்போதுதான் பேச கற்று வருவதாக கிண்டல் செய்திருந்தார்.

     ஆனால் தன்னுடைய குற்றச்சாட்டில் உறுதியாக உள்ள ராகுல் காந்தி, இது தொடர்பாக மீண்டும் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

     உத்தரபிரதேசத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இது குறித்து கூறுகையில், ‘என்னை எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் கிண்டல் செய்யுங்கள். ஆனால் உங்கள் மீது கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் கூறுங்கள். இது நான் மட்டும் கூறிய குற்றச்சாட்டு அல்ல. வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறி உங்களால் ஏமாற்றப்பட்டதாக கருதும் இந்திய இளைஞர்களின் குற்றச்சாட்டு’ என்றார்.

     முன்னதாக இது குறித்து தனது சுட்டுரை தளத்தில் ராகுல் கூறுகையில், ‘மோடி கடந்த 2013-14-ம் ஆண்டு காலகட்டத்தில் சகாரா நிறுவனம் உங்களுக்கு வழங்கிய 10 பைகளில் என்ன இருந்தன? என்பதை முதலில் கூறுங்கள்’ என்று தெரிவித்து இருந்தார்.

     தனது குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில், சகாரா நிறுவனம் வருமான வரித்துறைக்கு அளித்த ஆவணத்தில் ‘மோடிக்கு வழங்கியது’ என கூறியிருந்த 9 பதிவுகள் குறித்த விவரங்களையும் அவர் தனது சுட்டுரை தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

     ராகுல் காந்தியின் இந்த கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் எனவும், இதுகுறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.