Show all

வழக்கறிஞர் பிரசாந்த் பூசணுக்கு ஒரு ரூபாய் அபராதம்! கட்டத் தவறினால், மூன்று மாதச் சிறை மற்றும் மூன்று ஆண்டு பணிபுரியத் தடை

64 அகவையினரான பூசண், உச்ச அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் எஸ்.ஏ.பாப்டே, விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் கீச்சுவில் பதிவிட்ட கருத்துக்கு ஒரு ரூபாய் அபராதம்! கட்டத் தவறினால்: மூன்று மாதச் சிறை மற்றும் மூன்று ஆண்டு பணிபுரியத் தடை

15,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: உச்ச அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் எஸ்.ஏ.பாப்டே, விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் கீச்சுவில் பதிவிட்ட கருத்துக்கு, வழக்கறிஞர் பிரசாந்த் பூசணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அபராதத் தொகையை நாளது 30ஆவணிக்குள் (செப்டம்பர் 15) அவர் கட்டத் தவறும்பட்சத்தில் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணிபுரியத் தடை விதிக்கப்படும் எனவும் உச்ச அறங்கூற்றுமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

வழக்கறிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூசண் மனித உரிமை மீறல் உள்ளிட்ட பல்வேறு சமூக அவலங்களுக்காக, தொடர் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்துவருபவர். 64 அகவையினரான பூசண், உச்ச அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் எஸ்.ஏ.பாப்டே, விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் கீச்சுவில் பதிவிட்ட கருத்து சர்ச்சை ஆக்கப்பட்டது. 

இது அறங்கூற்றுத்துறையை விமர்சிக்கும் வகையான கருத்து என்பதாகப் பிரசாந்த் பூசண்மீது அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டது. 

பிரசாந்த் பூசண் தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அறங்கூற்றுவர்கள் குறிப்பிட்டனர். ஆனால், தனது அநதக் கருத்துக்காக மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று பிரசாந்த் பூசண் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதற்காக அவருக்கு உச்ச அறங்கூற்றுமன்றம் இரண்டு முறை காலவரையறை வழங்கியது.

இருப்பினும், பிரசாந்த் பூசண் தரப்பில் மன்னிப்புக் கேட்பதில்லை என்று கூறப்பட்ட நிலையில், தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அறங்கூற்றுவர்கள் வழக்கை நாள் குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்தநிலையில், பிரசாந்த் பூசணுக்கான தண்டனை விவரங்களை அறங்கூற்றுவர்கள் இன்று அறிவித்தனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.