Show all

இரட்டை மடிவலையால் மீன்களை மொத்தமாக பிடித்து வந்து விடுகிறார்கள்: வி.கே.சிங்

இலங்கை கடற்படையினரால் பிடித்துச்செல்லப்படுகிற தமிழக மீனவர் பிரச்சினையில் உடன்பாடு ஏற்படாதது ஏன் என்பது குறித்து பாராளுமன்றத்தில் மந்திரி வி.கே.சிங் விளக்கம் அளித்தார்.

 

தமிழக மீனவர்கள், கடலில் மீன்பிடிக்கச்செல்கிறபோது அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பிடித்துச்செல்வதும் தொடர்கதை ஆகி வருகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

 

இந்தப் பிரச்சினை தொடர்பாக டெல்லி மேல்-சபையில் வெளியுறவு ராஜாங்க மந்திரி வி.கே.சிங் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

 

தமிழக மீனவர்கள் இரட்டை மடிவலையைப் போட்டு மீன்களை மொத்தமாக பிடித்து சென்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டின்கீழ்தான் இலங்கை அதிகாரிகளால் அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி சர்வதேச கடல் எல்லை வரையறையும் பார்வைக்கு தெரியாததால்தான் தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டி சென்று விடுகின்றனர்.

 

தற்போதைய நிலவரப்படி இலங்கை சிறைகளில் 34 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். 19 படகுகள் இலங்கையின் காவலில் உள்ளன. அங்கு அடைபட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடுவண் அரசு அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வந்துள்ளது. கடைசியாக கடந்த மாதம் 9-ந்தேதி 99 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

 

இரு நாட்டு மீனவர்கள் இடையே புரிந்துகொள்ளுதல் ஏற்படாத வரையில் இது ஒரு தீவிர பிரச்சினையாக இருக்கும். இரு தரப்பு மீனவர்கள் சங்கங்கள் இடையே 3 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் புரிந்துகொள்ளுதல் ஏற்படவில்லை.

 

எங்கள் பகுதியில் வந்து இரட்டைமடி வலைகளை போட்டு அவ்வளவு மீன்களையும் தமிழக மீனவர்கள் அள்ளிச்சென்று விடுகிறார்கள் என்று இலங்கை மீனவர்கள் சொல்கிறார்கள். அதை நிறுத்திக்கொள்ளாத வரையில், பரஸ்பரம் ஒருவர் கடலில் மற்றவர் மீன்பிடிப்பது தொடர்பாக சரியான உடன்பாடு ஏற்படுத்த முடியாது. இதுதான் இரு நாடுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட தடையாக உள்ளது.

 

இந்திய மீனவர்களின் (தமிழக மீனவர்களின்) பாதுகாப்புக்கு நடுவண் அரசு கூடுதல் முன்னுரிமை அளிக்கிறது. இலங்கை சிறையில் அடைக்கப்படுகிற தமிழக மீனவர்களுடன் தூதரக ரீதியில் தொடர்பு கொள்ளப்படுகிறது. உயர்மட்ட அளவில் தொடர்பு கொண்டு அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.