Show all

தூரிகை! தூரிகையின் எழுத்து, தூரிகையை இயக்கும் என்பதைப் பெற்றோர் புரிந்து கொள்ளாமல் போனது வேதனை.

மற்ற மற்றவர்களுக்கு, நிறைய நிறைய நம்பிக்கையூட்டி பேசி வந்தவர்கள்- நம்பிக்கை இழந்த தருணங்களாக சின்னத்திரை நடிகை சித்ராவைத் தொடர்ந்து பேரறிமுக பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகையின் தற்கொலை சோகம் இசைத்திருக்கிறது. 
 
27,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இரண்டு நாட்கள் ஓடிப்போனது. பேரறிமுக பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகையின் தற்கொலை அதிர்ச்சியில் இருந்து, தமிழ்திரையுலகம் மீள இயலாமல் தவித்து அதையே பேசிவருகிறது

மற்ற மற்றவர்களுக்கு, நிறைய நிறைய நம்பிக்கையூட்டி எழுதி வந்த தூரிகை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த அவரது அம்மா உசா, இதனைப் பார்த்து அலறியடித்து வெளியே ஓடி வந்து 'என் பொண்ணை காப்பாத்துங்க' என்று கூச்சல் போட்டுள்ளார். 

அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து, தூரிகையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சையும் தரப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகுதான், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமணத்துக்கு குடும்பத்தினர் வற்புறுத்தியதால்தான் இப்படி முடிவை எடுத்ததாக முதல்கட்டமாக சொல்கிறார்கள். 

தூரிகையை அவரது பெற்றோர் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தியது தான் அவரின் தற்கொலை முடிவுக்கு காரணம் என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாம். பாடலாசிரியர் கபிலனின் மகள் வேறு யாரையாவது காதலித்து வந்தாரா? காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில், தான் இப்படியொரு முடிவை எடுத்து விட்டாரா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை. அழகான ஆழமான பொருள் பொதிந்த தமிழ்ச்சொல் தூரிகை. எழுதுவதற்கானவன் என் மகள் என்று பெயரிட்ட குடும்பத்தாருக்கு அந்த எழுத்து அவளை இயக்கும் என்பதைப் புரிந்து கொள்ளாமல் போனது வேதனை. தூரிகையை எதோ முரட்டுத் தளத்தில் எழுதப் பணித்த காரணமோ என்னவோ அது முனையை உடைத்துக் கொண்டது.

வணிக நிருவாக முதுவர் படித்திருக்கிறார். முற்போக்கு சிந்தனையோடு, துணிச்சல் நிறைந்த பெண்ணாக தூரிகை வலம் வந்தாரே என்று அங்கலாய்க்கப்படுகிறது. முற்போக்கு இயக்க தலைவர்கள், திராவிட இயக்க தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். ஆங்கிலத்தில் கட்டுரைகளையும், விரிவுரைகளையும் தூரிகை எழுதி வந்துள்ளார். ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வந்துள்ளார். கிழமை இதழ் ஒன்றை தொடங்கி நடத்தி வந்த நிலையில், ஊக்குவிப்பு அளிக்கும் பதிவுகளை தன்னுடைய முகநூலில் பதிவிட்டு வருபவர். 

இப்படி ஒரு முடிவை எடுத்ததை யாராலும் நம்ப முடியவில்லை. சின்னத்திரை நடிகை சித்ராவின் இறப்பும் இத்தகையதே. உளவியல் படித்த துணிச்சலான பெண் சித்ரா. எத்தனையோ இளம்பெண்களுக்கு, ஊக்குவிப்பாளராகத் திகழ்ந்தார். அவர் தற்கொலை செய்தார் என்பதை இன்றுவரை அவரது கொண்டாடிகள் நம்பவேயில்லை. 

இரண்டு பெண்களுமே அயல்கலாச்சாரங்களில் உலா வர பெற்றோரால் நிபந்தனையோ, தடையோ கிஞ்சித்தும் இல்லாமல் அனுமதிக்கப்பட்டவர்கள்தாம். இருவருக்கும் வந்தது ஒரேவகையான சறுக்கல்தான். திருமணம் என்று வருகிற போது மட்டும் பெற்றோரின் நிபந்தனை அல்லது தடை. 

பெற்றோர்களின் கையைப்பிடித்துக் கொண்டே ஆங்கிலவழிக் கல்வி, ஐரோப்பிய கலாச்சார வாழ்க்கைமுறை, நண்பர்கள், தொழில் தொடர்புகள் என்று அனைத்திலும் அயல்கலாச்சாரங்களில் உலா வர முடிந்த நிலையில்- முதலாவதாக திருமணம் குறித்த நடவடிக்கையில் பெற்றோரின் பிடி தளர்ந்து போனபோது, இது வரை பயணித்த பாதையின் மீதிருந்த அனைத்து நம்பிக்கைகளும் தளர்ந்து போய் மனம் பொலபொலத்துவிடுகிறது.  

சின்னத்திரை சித்ரா பெற்றோரின் கையை விடுவித்துக் கொண்டு, புதிய துணையோடு கொஞ்சம் தூரம் பயணித்ததை புதிய துணை தவறாகப் புரிந்து கொண்டது. சித்ரா நம்பிக்கை இழந்தார். ஆனால் தூரிகையோ, பெற்றோரின் பிடி தளர்ந்து போனபோது, தட்டிவிட்;டுச் சென்று விட்டார்.

பெற்றோர்கள் எல்லா நிலைகளிலும் பிள்ளைகளுக்கு சுதந்திரம் அல்லது நிபந்தனையை தொடர்வதில் பிள்ளைகள் நம்பிக்கை இழந்து விடுவதில்லை. பெற்றோர்கள் நிபந்தனைகளை தளர்த்தி சுதந்திரம் அளிக்கும் போது பிழை ஏற்படுவதில்லை. அனால் பெற்றோர்கள் சுதந்திரத்தைத் தளர்த்தி நிபந்தனைகளை முன்னெடுக்கும் போது பிள்ளைகள் துவண்டு போய் விடுகின்றனர். என்பதை உணர்த்துகின்றன இந்த இருபெரும் இழப்புகள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,369.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.