Show all

அதிமுகவிற்கு பெருமை சேர்த்த ச.ம.உ 70ஆண்டுகளுக்குப் பின் மின்வசதிபெற்ற ஆதிவாசிகிராமம்

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை ஆனைகட்டி அருகில் 15-க்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. அதில் சேம்புகரை மற்றும் தூமனூர் கிராமம் உள்ளன. இந்தக் கிராமங்களில் பல ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்தாலும், மற்ற பகுதிகளைப் போல இந்திய விடுதலைக்குப் பிறகும் கூட, மின் வசதி கிடைக்கவில்லை. சாலை வசதிகளும் இல்லை.

மின் வசதி இல்லாததால் வன விலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகள், விவசாயம் செய்வதில், கல்வி கற்பதில் சிரமம் என பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இது குறித்து பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன. கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி ஆதிவாசி கிராமங்களுக்கு மின் வசதி குறித்து, முதல்-அமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சரிடம் தகவல்களை அளித்து மின்வசதி கொண்டு வர நடவடிக்கை எடுத்தார்.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேம்;புக்கரை என்ற கிராமத்திற்கு மின் வசதி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தூமனூருக்கும் மின்வசதி கொடுக்கப்பட்டது. பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து ஆனைகட்டிக்கு வரும் மின் வழித்தடத்தில் தனியே 37 கம்பங்கள் மூலம் தூமனூருக்கு 100 கே.வி.மின்சாரம் பிரித்து கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மின்மாற்றி மூலம் மின் விநியோகம் செய்யப்பட உள்ளது.

முதல் கட்டமாக அங்கு 2 வீடுகளுக்கும், பள்ளிக்கூடத்திற்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. மின் விநியோகத்தை சட்டமன்றஉறுப்பினர் ஆறுக்குட்டி தொடங்கி வைத்தார். அப்போது மின்சாரம் கிடைத்த மகிழ்ச்சியில் ஆதிவாசி கிராம மக்கள் நடனமாடினர். அவர்களுடன் ஆறுக்குட்டி சட்டமன்ற உறுப்பினரும நடனமாடி மகிழ்ந்தார். இது குறித்து மின் வாரியத்தினர் கூறும்போது, சாலை கூட இல்லை என்பதால் இங்கு மின்வசதி ஏற்படுத்த முடியவில்லை. பின்பு சாலை வந்தும் கூட திட்டம் கிடப்பிலேயே இருந்தது. பல கட்ட போராட்டத்துக்கு பிறகு அனுமதி பெற்று மின் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாக கோரிக்கையின் படி தெருவிளக்குகளும், தனிநபர் விண்ணப்பங்களின் படி வீட்டு இணைப்பும் விரைவில் கொடுக்கப்படும். ஒட்டுமொத்த கிராமும் மின்வசதி பெறும் என்றனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.