Show all

ஏறுமுகமாக விஜய் தொலைக்காட்சி. சரிவில் சன் தொலைக்காட்சி

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பல ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த செய்தி நேரத்தை மாற்றியது, சன் தொலைக்காட்சி தன்னுடைய சரிவை ஒப்புக் கொண்டதற்கான சிறந்த அடையாளம்.

சன் தொலைக்காட்சியின் ஆங்கில பெயரடையாளம் சன் தொலைக் காட்சி தொடங்கியதிலிருந்து தமிழ் ஆர்வலர்களுக்கு ஓர் உறுத்தல்.

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து, தனது பெயரடையாளத்தை ‘விஜய் என்று அடையாளப் படுத்தியது, தமிழ் மக்களிடம் தான் வளர்ந்து கொண்டிருக்கிற பெருமிதத்தை வெளிப் படுத்துகிறது.

தமிழகத்தின் முதல் தனியார் தொலைக்காட்சி என்ற பெருமைக்கு உரியது சன் தொலைக்காட்சி. பல ஆண்டுகளாக ஊரின் தெருவுக்குள் நாம் பயணிக்கும் போது நாம் சென்றடைய வேண்டிய இடம் வரும் வரை ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பது நம் காதுகளில் வந்து பாயும்.

சன் தொலைக்காட்சி- மெட்டி ஒலி, சித்தி, போன்ற மக்களை ஈர்க்கும் நாடகங்களை ஒளி பரப்பிக் கொண்டிருந்த போது,

விஜய் உள்ளிட்ட பல தனியார் தொலைக்காட்சிகள்- உதடுகளும், ஒலிப்புகளும் பொருந்தி வராத, ஹிந்தி நாடகங்களின் தமிழ் பதிப்புகளை ஒளி பரப்பிக் கொண்டிருந்தன.

தற்;போது, விஜய் தொலைக்காட்சி- தமிழ் கடவுள் முருகனை தன் அடையாளமாக்கி மகிழ்கிறது. சன் தொலைக்காட்சியோ, பிள்ளையாரை ஒளிபரப்பி தன் அடையாளத்தை இழக்கிறது.

எடுத்துக் காட்டாக, விஜய் தொலைக்காட்சியின் ராஜாராணி நாடகம், மீட்கவே முடியாத கார்த்திக்கை, செம்பருத்தி ஒரே கிழமையில் மீட்டு விடுவதாக கதைத் தலைவியை, புலியை முறத்தால் அடித்த தமிழச்சியைப் போல வெளிப்படுத்தி நம்மை மகிழ்ச்சியிலேயே வைத்திருக்கிறது.

தெய்வமகள் நாடகத்தில் சத்தியா தன் கடத்தப் பட்ட குழந்தையை மீட்கிறார், மீட்கிறார், இன்னும் மீட்கவில்லை. இது கதைதலைவியின் மீது சுமத்துகிற சுமையல்ல; உண்மையில் பார்வையாளர்கள் மீது திணிக்கிற சுமை. சன் தொலைக்காட்சி பார்வையாளர்கள் பெரும் பாலோர் இதனாலேயே விஜய் தொலைக் காட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வாணிராணி நாடகம் வடிக்கும் ராடன் நிறுவனம் தேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இறக்கத்தைச் சந்திக்கும் நிறுவனம். பள்ளிக்குச் செல்லுவதற்கு முன் நம் குழந்தை கிடைத்த புத்தகத்தில் கிறுக்குவதைப் பார்த்து மகிழ்கிறோம் என்பதற்காக இதுபேன்ற வடிவமைப்பை சின்னத் திரையில் இரசித்துக் கொண்டிருக்க முடியாது. பிரியமானவளின் பிள்ளைகள் அத்தனை பேரையும், எப்போதும் முட்டாள்களாகவும், போமானிகளாகவும் காட்ட வேண்டிய தேவைதான் என்ன?

சன் தொலைக்காட்சியில் வரும் தொடர்களில் காணப் பெறும் கேவலமான முட்டாள் காவலர்களைப் போல, தமிழகக் காவல்துறையில் ஒரேயொரு காவலரைக் கூடக் காண முடியாது.

சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நேரத்தை மாற்றும் முயற்சியை விட்டு விட்டு, நிகழ்ச்சியின் தரத்தை மேம்படுத்துதலில் முயலலாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,695

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.