Show all

தங்கள் உணர்வுகளை மதித்து வணங்குகிறோம் விஜய் சேதுபதி

தேசிய விருது கொடுத்தால் அதைவாங்க மாட்டேன் என்று கருப்பன் படத்தின் இதழியலாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

நடுவண் அரசு தேசிய விருதுக் கொடுத்தால் வாங்க மாட்டேன். ஏனென்றால் நாம் நசுக்கப்பட்டுக் கொண்டுத்தான் இருக்கிறோம். தொடர்வண்டி பயணச்சீட்டில் கூட நமது மொழியை எடுத்துவிட்டார்கள். அதுவெல்லாம் பெரிய வருத்தம், நிறைய கோபம் வருகிறது. நாம் உணர்ச்சிவசப்படுதால் நிறையப் பேர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். உணர்ச்சிவசப்படுதலைக் குறைத்து செயலில் இறங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

என்றார்.

பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கருப்பன். செப்டம்பர் 29 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் இதழியலாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது:

மனித வாழ்க்கையின் அழகும் தொடக்கமும் முடிவும் அன்பு தான். முன்பின் தெரியாத கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து வாழும் போது வரும் அன்பு தான் வாழ்க்கையின் ஆதாரமும் கூட. அதை அழகாக சொல்லியிருப்பது தான் ‘கருப்பன்’. என் மனைவியாயக தான்யா மிக அழகாக நடித்திருக்கிறார்.

விக்ரம் வேதா வெளியாகும் போது, ஒரு அழுத்தம் பரபரப்பு இருந்தது. அதற்குக் காரணம் மக்கள் எதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பது தான். இப்படத்தின் தலைப்பிலிருந்து படத்தினுள் பேசப்பட்டிருக்கும் பொருள் அனைத்துமே நம் மண் சார்ந்து மக்களுடைய வாழ்க்கையைப் பற்றிய படம். விழாக்கால விடுமுறையில் வெளியாகும் எனது முதல் படம் ‘கருப்பன்’

எதார்த்தமான படங்களை விட வணிக நோக்குப் படங்களில் நடிப்பது கடினம். 10 பேரை அடிக்கும் போது வரும் முகபாவனை மிகவும் கடினமானது. எதார்த்தமாக நடிப்பது மிகவும் எளிது. வணிக நோக்குப்; படங்களை தரம் பிரிப்பது பார்ப்பதில் உடன்பாடில்லை. வசூல் ரீதியாக எந்தப் படங்கள் எல்லாம் மக்களிடையே வரவேற்பைப் பெறுகிறதோ, தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கிறதோ அவை அனைத்துமே வணிக நோக்குப் படங்கள் தான்.

நான் செய்யும் படங்கள் மட்டுமே சரி என்று பேசியதில்லை. அனைத்து விதமான படங்களும் வர வேண்டும். அவையும் கொண்டாடப்பட வேண்டும். என்னிடம் வரும் கதை சுவாரசியமாக சொல்லப்பட்டு இருக்கிறதா என்று தான் பார்க்கிறேன். நடிகருக்காக மட்டுமே எந்தொரு படமும் ஓடாது என்பதை முழுமையாக நம்புகிறேன். முதல் நாள் முதல் காட்சி முதல் 10 நிமிடங்கள் மட்டுமே நடிகருக்காக இருக்கும், அதற்குப் பிறகு கதை என்ன சொல்கிறது என்பதற்குள் போய்விடுவார்கள். அந்த வேலையை இயக்குநர் பன்னீர்செல்வம் இப்படத்தில் அருமையாக சொல்லியிருக்கிறார்.

விஜய் சேதுபதி என்பவன் பெரிய ஆளெல்லாம் இல்லை. அவனும் ஒரு சாதாரணமான ஆள் தான். அவனுக்கும் மசாலா படம் செய்ய வேண்டும், அவன் அடித்தாலும் 10 பேர் பறக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. பல படங்களில் சிறு கதாபாத்திரம் வரும் போது தவிர்த்து விடுகிறேன். முடிந்தவரை தவிர்த்துவிடுகிறேன், ஆனால் அதையும் மீறி வரும் போது நடித்துவிடுகிறேன்.

சல்லிகட்டைப் பற்றி தமிழ்மக்களே நிறைய சாதித்து விட்டார்கள் பெருமையாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போது போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்திற்கு நன்றி மட்டுமே தெரிவித்திருக்கிறோம்.

இந்திய மக்களாட்சியில் அரசியலுக்கு வருவதற்கான அத்தனை உரிமையும் இருக்கிறது. மக்களின் மீது அன்பும் அக்கறையும் இருந்தால் ரஜினி மற்றும் கமல் என்றில்லை யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர்கள் வரலாமா, வரக்கூடாதா என்ற பேச்சில் எனக்கு உடன்பாடில்லை. அரசியல் பற்றிய சிந்தனை, எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்கள் இருக்கிற யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

தியாகராஜன் குமாரராஜா மாதிரியான இயக்குநரோடு படம் பண்ணுவது ஒரு அனுபவம். அந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நடிகனாக வளர்வேன் என நினைக்கிறேன். தியாகராஜன் குமாரராஜாவோடு வேலை செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.