Show all

ஹிந்திநடிகர் சல்மான்கான் சுல்தான் பட சாதனையைத் தகர்த்தெறியும் கபாலி

நடிகர் ரஜினி நடித்த, கபாலி படம் வெளியான ஒரே நாளில், 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. நடிகர் ரஜினி நடிக்க, ரஞ்சித் இயக்கிய படம், கபாலி. நேற்று முன்தினம், உலகம் முழுக்க, 50 நாடுகளில், 6,500 திரையரங்குகளில் வெளியானது. அமெரிக்காவில், 480; மலேஷியாவில், 490; வளைகுடா நாடுகளில், 500 திரையரங்குகளிலும், கபாலி வெளியானது. தமிழகத்தில் மட்டும், ஒரே நாளில், 25 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ள, கபாலி படம், நாடு முழுவதும், 58 கோடி ரூபாய்; உலகம் முழுவதும், 104 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. முதல் வார வசூல், 300 கோடி ரூபாயை தாண்டி, ஹிந்தி நடிகர் சல்மான் கான் நடித்த, சுல்தான் பட சாதனையை தகர்த்தெறியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியான முதல் நாளே, 3,500 திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சியாக நடந்தது. 2,000 திரையரங்குகளில் ஒரு கிழமைக்கான நுழைவுச் சீட்டுக்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாடு கேளிக்கைகள் வரி சட்டம் -1939ன் கீழ், கேளிக்கை வரிச்சலுகை பெற, திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், சில கூடுதல் தகுதி வரையறைகளை, தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இவற்றை நிறைவு செய்யும் திரைப்படங்களைப் பார்வையிட்டு, வரி விலக்கிற்கு பரிந்துரை செய்ய, ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்ற தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தை பார்வையிட்ட, அனைத்து உறுப்பினர்களும், வரி விலக்கு அளிக்க பரிந்துரை செய்தனர். அதை ஏற்று, கபாலி படத்திற்கு, ஜூலை, 21ம் நாளில் இருந்து, கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினி நடித்த, கபாலி படம், நேற்று முன்தினமே இணையதளங்களிலும் வெளியானது. 300 எம்.பி., முதல், 400 எம்.பி., வரையில், முழு படமும் வெளியானது. இதனால், செல்பேசிகள் வழியாகவும், கபாலி படம் பதிவிறக்கம் செய்யப்பட்டு, ப்ளூடூத், ஷேர்இட் வாயிலாக செல்பேசிகளிலேயே பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கபாலி பட திருட்டு வி.சி.டி., விற்பனையை காவல் துறையினர் கண்காணித்து வருவதால், மெமரி கார்டில் கபாலி படம் பதிவிறக்கம் செய்து விற்கப்படுகிறது. இந்த வகையில், சென்னையில், கபாலி படம் அடங்கிய மெமரி கார்டு விற்பனை களை கட்டியுள்ளது. 200 ரூபாய்க்கு விற்கப்படும், 4 ஜிபி திறன் கொண்ட மெமரி கார்டு, கபாலி படத்துடன், 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.