Show all

வாழ்க்கையை மடைமாற்றும் இரண்டு பேரறிமுகங்கள்! ஒருவர் நயன்தாரா, மற்றவர் நரேந்திரமோடி

நம்மை வியப்பில் ஆழ்த்திய இரண்டு மடைமாற்றங்கள் கட்டுரையாகிறது இங்கே. இரண்டும் வாழ்க்கை மடைமாற்றங்களே. நயன்தாராவின் வாழ்க்கை வணிகமாக மடைமாற்றப்பட்டது என்றால் நரேந்திர மோடியின் வாழ்க்கை அரசியல் ஆதாயமாக மடைமாற்றப்பட்டுள்ளது.

05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: நூறாவது பிறந்தநாளை கொண்டாடிய தன் தாயை சந்திக்கச் சென்ற தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி, படப்பிடிப்புக் கலைஞர் வரும்வரை காரிலேயே காத்திருந்ததான காணொளி ஓ! இதிலும் அரசியல் ஆதாயமா? என்கிற தலைப்பில் இணையத்தைக் கலக்கி வருகிறது.

இந்திய தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபாய் மோடி குஜராத் மாநிலம் காந்திநகரில் வசித்து வருகிறார்.

தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளன்றும், தன் தாயின் பிறந்தநாளன்றும், தேர்தல் சமயங்களிலும், தேர்தலில் வென்ற பிறகும் தனது தாயை சந்தித்து வாழ்த்து பெறுவார். நரேந்திர மோடி தன் தாயிடம் வாழ்த்துபெற்று அவருடன் பேசும் புகைப்படங்களும், காணொளிகளும் சமூக வலைதளங்களில் தீயாக்கப்படுவதும் வழக்கம்.


அந்த வகையில் நேற்று தலைமைஅமைச்சரின் தாய் ஹீராபாய் மோடி தனது 100 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை கொண்டாடுவதற்காக, குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள தன் தாயின் வீட்டுக்கு நரேந்திர மோடி சென்றார். அங்கு தனது தாயாரை சந்தித்து நலம் விசாரித்த மோடி, அவருக்கு இனிப்பு ஊட்டினார்.

தாயுடன் சேர்ந்து சிறப்பு வழிபாடு செய்த அவர், தாயின் காலை கழுவி அந்த நீரை கண்ணில் ஒற்றிக் கொண்டார். மோடியின் தாய் நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் நலத்துடனும் வாழ பல கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குறிப்பாக வாட்நகரில் உள்ள பேரறிமுகமான ஹட்கேஷ்வர் கோவிலில் சிறப்புப் பூசைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனமானமொன்று வெளியிட்ட காணொளி தற்போது அதிகளவில் தலைப்பாக்கப்பட்டு வருகிறது. அதில், காந்திநகரில் உள்ள தன் தாயின் இல்லத்துக்கு சென்ற மோடி, கார் நின்ற பிறகும் உள்ளேயே அமர்ந்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து படப்பிடிப்புக் கலைஞர் அங்கு வந்தவுடனே மோடி காரிலிருந்து இறங்குகிறார். இதனை பலரும் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

அண்மையில் நடந்த நயன்தாரா திருமணம் குறும்படமாக ஒரு எண்ணிம நிறுவனத்திற்கு வணிமாக்கப்பட்டது பேசுபொருளாகி வந்த நிலையில், தற்போது மோடியின் இந்த அருமையான வாழக்கை நிகழ்வு அரசியல் ஆதாயம் ஆக்கப்பட்டதும் பேசுபொருளாகியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,284. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.