Show all

கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 திட்டமிட்டபடி வெளியாகும்! படத்துக்கு தடை விதிக்க சென்னை அறங்கூற்றுமன்றம் மறுப்பு

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள விஸ்வரூபம் படத்திற்கு தடை கேட்டு பிரமிட் சாய்மீரா நிறுவனம் சென்னை உயர்அறங்கூற்றமன்னத்தில்  கடந்த வியாழனன்று மனு பதிகை செய்தது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மர்மயோகி என்ற படத்தில் கமல் நடிக்க, படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடி வழங்கப்பட்டதாம்.

அத்துடன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டதாகவும் அந்தப்பணம் 'மர்மயோகி' படம் தயாரிக்க பயன்படுத்தப்படாமல், 'உன்னைபோல் ஒருவன்' படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே ரூ.6.90 கோடி கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் 'விஸ்வரூபம் 2' படத்தை இன்று வெள்ளிக் கிழமை படம்  வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 'விஸ்வரூபம் 2' படத்தை தயாரிக்க கமல் பலரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், 'மர்மயோகி' படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கொடுக்க வேண்டும். இல்லையென்றால் 'விஸ்வரூபம் 2' படத்தை வெளியிடத்தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கமல்ஹாசன் சார்பில் தாக்கல் பதிகை செய்யப்பட்ட மனுவில், பிரமிட் சாய்மீரா நிறுவனம் ரூ.4 கோடி மட்டுமே கொடுத்ததாகவும், அந்த பணம் மர்மயோகி படத்தின் ஆரம்பகட்ட பணிகளுக்கு செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மர்மயோகி படத்துக்கு வேறு தயாரிப்பாளர் கிடைத்ததும் அந்த பணத்தை திருப்பி வழங்கிவிடுவதில் எந்தச் சிக்கலும், தயக்கமும் இல்லை என்று கமல்ஹாசனின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க முடியாது என கூறிய அறங்கூற்றுவர்கள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,875.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.