Show all

வெளிநாடுகளில் படிக்கச் சென்ற 22 இந்திய மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி! தனியார் முகவரகங்கள் சமர்ப்பித்த போலிச் சான்று

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்வி உயர்நிலை படிப்புக்காகச் செல்லும் மாணவர்கள் தனியார் முகவரகங்களை அணுகி வருகின்றனர். இதனால், ஏற்படக்கூடிய விளைவுகளைப் பெற்றோர்களும் மாணவர்களும் கவனிக்கத் தவறி விடுகின்றனர். அதனால், வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்கள், பாதியில் படிப்பை விட்டுவிட்டு நாடு திரும்பும் அவலம் ஏற்படுகிறது.

கோவையைச் சேர்ந்த தனியார் முகவரகம் மூலம் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 22 மாணவர்கள், வணிகவியல் ஆளுமை முதுவர் பட்டப் படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றனர். போலி தேசிய அங்கீகார வாரிய சான்றிதழ்களை முகவரகம் சமர்ப்பித்ததால் மாணவர்களின் நுழைவுஇசைவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால், என்ன செய்வதென்று அறியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள அரசிடம் மாணவர்கள் தரப்பினர் முறையிட உள்ளனர். முகவரகத்தில் அசல் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், நுழைவுஇசைவு நடைமுறையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு, நுழைவுஇசைவு ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கோவையில் இதுபோன்ற தனியார் முகவரகங்களின் எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. கோவை உள்பட பல்வேறு ஊர்களில் இயங்கும் முகவரகங்கள இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,874.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.