Show all

இந்தியத் திரைத்துறை வரலாற்றில் கபாலி திரைப்படத்தின் வசூலே மைல்கல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 22ம் தேதி வெளியான கபாலி திரைப்படம் பல்வேறு பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துள்ளது. அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான கபாலி திரைப்படம் பல்வேறு மாறுபட்ட விமர்சனங்களைப் பெற்ற போதிலும், வெளியான நாள் முதலே பல்வேறு பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. மலேசியாவைக் கதைக்களமாக கொண்ட போதிலும், பெரும்பான்மையாக சென்னையில் செட்போட்டு எடுக்கப்பட்டதால் படத்தின் முதலீடு குறைவானதாக அமைந்தது. இளம் இயக்குநர் ரஞ்சித் மற்றும் அவரது இளம் குழுவே படத்தை உருவாக்கியதால் படத்தின் உருவாக்கச் செலவு ரூ.80 கோடிக்குள் கட்டுப்படுத்தப்பட்டதாக தமிழகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கபாலி வெளியாகி 2கிழமைகள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், நேற்றைய (ஆக.4) நிலவரப்படி, ரூ.650 கோடி வரை வசூலீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாவதற்கு முன்பாகவே தொலைக்காட்சி உரிமை, பாடல்கள் விற்பனை என ரூ.200 கோடி வரை ஈட்டியது. இதனால், வெளியீட்டிற்கு முன்னதாகவே கபாலி திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.120 கோடி லாபம் ஈட்டியது. பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்தின் கணிப்புப்படி, இந்தியாவில் ரூ.211 கோடி வசூலீட்டியுள்ள கபாலி, வட இந்தியாவில் ரூ.40 கோடியும், மலேசியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் ரூ.259 கோடி வசூலீட்டி சாதனை படைத்துள்ளது. நூற்றாண்டுகால இந்திய திரைத்துறை வரலாற்றில் கபாலி திரைப்படத்தின் வசூலே மைல் கல்லாக அமைந்துள்ளதாக தயாரிப்பாளர் தாணு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூம்-3, பாகுபாலி படங்களின் வசூலினை தகர்த்தெரிந்துள்ள கபாலி திரைப்படம் விரைவில் ரூ.700 கோடியை நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய திரைப்படங்களில் ரூ.700 கோடி வசூலீட்டிய ஒரே திரைப்படம் அமீர்கானின் ‘பி.கே’ மட்டுமே. அமீர்கானின் படத்தின் சாதனையையும் ‘கபாலி’ முறியடிக்கும் என்று ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ‘பி.கே’ திரைப்படம் 24 நாட்களில் 625 கோடி ஈட்டியிருந்த நிலையில், ‘கபாலி’ 14 நாட்களிலேயே ரூ.650 கோடி வசூல் குவித்துள்ளது. இதனிடையே ஜூலை 6ம் தேதி வெளியான சல்மான் கானின் ‘சுல்தான்’ திரைப்படம் இதுவரை ரூ.500 கோடி வசூல் ஈட்டியுள்ளது. இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தும் என சல்மான் கான் எதிர்பார்த்திருந்த நிலையில், ‘கபாலி’ படம் உலக அளவில் பெரும் வெற்றி பெற்றதால் சுல்தான் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக திரைத்துறை வல்லுநர்களால் தெரிவிக்கப்படுகிறது. இதனால், தூம்-3 உள்ளிட்ட படங்களின் வசூல் சாதனையை தனது படம் முறியடிக்கும் என்று எதிர்பார்த்திருந்த சல்மான்கான் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.