Show all

இலங்கைக்கு பாலம் அமைத்தால் குண்டு வைத்து தகர்ப்பார்களாம்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாலமொன்று அமைக்கப்படுமாயின் அதனை குண்டு வைத்துத் தகர்த்தெறியவும் தயாராக இருப்பதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்து அவர் மேலும் கூறுகையில், இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெறும் 12 ஆவது இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் கபீர் ஹாசிம், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் பாலம் ஒன்றை கட்டப் போகும் தகவலை வெளியிட்டுள்ளார். பாலத்தை நிர்மாணிப்பதன் மூலம் இந்தியாவையும் இலங்கையையும் இணைப்பதாக கூறினாலும் உண்மையில் இதன் மூலம் இலங்கையின் வடக்கு இந்தியாவின் தமிழ்நாடாக மாறிவிடும். இந்தியாவில் 50 மில்லியன் மக்கள் வேலை வாய்ப்பின்றி திண்டாடி வருகின்றனர். இலங்கையின் மொத்த மக்கள் தொகையானது 21 மில்லியன். பாலத்தை நிர்மாணிப்பதன் மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்பின்றி இருப்பவர்கள் இலங்கைக்கு வருவார்கள். அத்துடன் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் வடக்கு நோக்கி பயணம் மேற்கொள்ளவார்கள். இதன் மூலம் சிங்களவருக்கு இருக்கும் ஒரே தாய் நாடு இல்லாமல் போகும் ஆபத்து ஏற்படும். இவ்வாறு பல பிரச்சினைகள் உள்ள இந்தப் பாலத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறு நிர்மாணிப்பதாயின் நிச்சயம் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவது அவசியம் இந்தப் பாலத்தை நிர்மாணித்தால் தேசிய பாதுகாப்புக்காக அந்தப் பாலத்தை குண்டு வைத்து தகர்ப்போம் எனவும் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.