Show all

தமிழ்த் திரையுலகம் வரலாறு காணாத முடக்கம்

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பட அதிபர்களும், திரையரங்க உரிமையாளர்களும் வேலை நிறுத்தங்களில் குதித்துள்ளதால் திரையுலகம் முடங்கி உள்ளது. ஏற்கனவே திருட்டு காணொளி, சரக்கு-சேவை வரி பிரச்சினை, பெப்சி தொழிலாளர்கள்-பட அதிபர்கள் மோதல் என்று சர்ச்சைகளை சந்தித்த பட உலகம் இப்போது மீண்டும் போராட்டக் களத்துக்குள் வந்துள்ளது.

திரையரங்கில் புதிய படங்களைத் திரையிடும் எண்ணிமச் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பட அதிபர்கள் கடந்த 17 நாட்களாக புதிய படங்களை திரைக்கு கொண்டுவராமல் வேலை நிறுத்தம் செய்கின்றனர். நேற்று முதல் திரைப்பட படப்பிடிப்புகளையும் நிறுத்திவிட்டனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்து வந்த 30-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. நடிகர்-நடிகைகள், பெப்சி தொழிலாளர்கள் வீட்டுக்கு திரும்பி விட்டார்கள். வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் நடக்கும் படப்பிடிப்புகளை வௌ;ளிக் கிழமையிலிருந்து நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தையும், சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் விசுவாசம் படத்தையும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தனர். இரண்டு படங்களின் பட வேலைகளும் முடங்குவதால் திட்டமிட்டபடி தீபாவளிக்கு கொண்டுவர முடியுமா? என்று படக்குழுவினர் குழம்புகிறார்கள்.

கமல்ஹாசன் நடிக்க உள்ள இந்தியன்-2 படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் அதிக பொருட்செலவில் அரங்கு அமைத்துள்ளனர். விரைவில் அங்கு படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால் பட அதிபர்கள் வேலைநிறுத்தத்தினால் படப்பிடிப்பு நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

திரையரங்க உரிமையாளர்கள் கேளிக்கை வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக சென்னை தவிர தமிழகம் முழுவதும் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை நேற்று முதல் மூடி உள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,730.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.