Show all

‘மெர்சல்’ தமிழர்களின் அடையாளம், பாரம்பரியம், பண்பாட்டைச் சுற்றியே வலம் வரும்: அட்லீ

தமிழர்களின் அடையாளம், பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றைச் சுற்றியே படத்தின் கதை இருக்கும் என்று மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லீ தெரிவித்தார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பு.

திரையுலகில் விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரின் 25-வது ஆண்டு உள்ளிட்டவை இவ்விழாவில் கொண்டாடப்பட்டன.

இவ்விழாவில் இயக்குநர் அட்லீ,

ஒருத்தன் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதைவிட, எவ்வளவு பேரை சம்பாதிக்கிறான் என்பது தலையாயது உங்களுடைய கைதட்டல்களை சம்பாதித்துள்ளதில் மகிழ்ச்சி.

மெர்சல் உருவாவதற்கு ஒரே ஒருவர்தான் காரணம். எனது அண்ணன், தளபதி விஜய் மட்டுமே. அவரோடு நெருங்கிப் பணிபுரிந்து வருவதால் எனக்கு உங்களை எல்லாம் விட இன்னும் நன்றாகத் தெரியும். இதுவரை என் வாழ்க்கையில் பார்த்த மனிதர்களில் மிகவும் நல்ல மனிதர். அவரால் தான் மெர்சல் கிடைத்தது. அதற்கு அவருக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன்.

இந்தப் படத்துக்கு அதிகமான உழைப்பு தேவைப்பட்டது. ஏனென்றால், தெறி மாதிரி ஒரு படம் செய்துவிட்டு, அதைத் தாண்டி அடுத்த படம் அமைய வேண்டும் என்ற எண்ணம் தான்.

தெறியில் 5 சண்டைக்காட்சிகள் இருந்தன என்றால், இதில் 14 சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. அனைத்து விசயங்களிலுமே ஒரு பெரிய உழைப்பு தேவைப்பட்டது. அதற்கு விஜய் அண்ணாவுக்கு நன்றி.

விஜய் அண்ணாவின் முழுமையான முயற்சியை,

மெர்சல் படப்பிடிப்பில் பார்த்தேன். ராஜஸ்தானில், ஏப்ரலில் படப்பிடிப்பு நடைபெற்ற போது 50 டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டியது. அத்தகைய வெயிலை சமாளிப்பது அந்த ஊர்க்காரர்களுக்கே கடினம். அந்த இடத்தில் திறந்தவெளி மைதானத்தில் 3000 பேரோடு விஜயை வைத்து படப்பிடிப்பு செய்தேன். அவரைப் போன்றதொரு நடிகரைப் பார்த்ததில்லை.

அவர் நினைத்தால் வசனம் பேசிப் போய்விடலாம். அதைத் தாண்டி ஏதாவது ஒரு விசயம் செய்து திருப்திப்படுத்த வேண்டும் என்று அவருடைய மனதில் இருக்கிறது. இவற்றை எல்லாம்விட இப்படத்தின் 100-வது நாள் விழாவில் இன்னும் நிறைய சொல்கிறேன்.

ராமநாராயணன் ஐயா நிறுவனத்தின் 100-வது படத்துக்கு என்னால் எவ்வளவு உழைப்பு தர முடியுமோ, அவ்வளவு தர வேண்டும் என நினைத்தேன். முரளி ஐயா போன்றதொரு தயாரிப்பாளரை இனிமேல் சந்திப்பேனா என்று தெரியவில்லை.

அதே போன்று முதல் படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் ஐயாவுடன் பணிபுரிய வேண்டும் என்று தாளிலேயே எழுதிக் கொண்டிருந்தேன். அது 3-வது படத்திலேயே அமைந்திருக்கிறது. இப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.

படத்தில் விஜய் அண்ணாவுக்கு 3 வேடங்களா என கேட்காதீர்கள். ஆனால் 3 கதை தலைவிகள் இருக்கின்றனர் . வடிவேலுவின் கதாபாத்திரம் உணர்ச்சிகரமானதாக இருக்கும். மணிவண்ணன் ஐயா போல அட்டகாசமாக நடித்திருக்கிறார். தமிழர்களின் அடையாளம், பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை சுற்றியே படத்தின் கதை இருக்கும்.

இவ்வாறு பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.