Show all

யோகா, தியானம்- இந்த இரண்டில் எது செய்வது சுலபம்?

வேறு ஒரு தளத்தில், யோகா, தியானம்- இந்த இரண்டில் எது செய்வது சுலபம்? என்று கேட்டிருந்த வினாவிற்கு விடையாக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 

01,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5125. 
யோகா, தியானம் என்கிற வடமொழித் தலைப்புகளில் இருக்கிற- ஓகம், ஓதல் என்கிற இரண்டையும் கடினம், எளிது என்று பாகுபடுத்த வேண்டிய தேவைஎதுவும் இல்லை. இரண்டையும் தமிழ்அடிப்படையில் மீட்டு நிறுவவேண்டிய தேவையே உள்ளது.

ஓகம், ஓதல் என்கிற இரண்டு கலைகளும் யோகா, தியானம் என்று வடமொழியாக்கம் செய்யப்பட்டு பலமாற்றங்களோடு நடைமுறையில் இருந்து வருகிறது.

ஓகக்கலை, தமிழ்முன்னோரால், ஓரகவை குழந்தை நடைபயிறலில் இருந்து உருவாக்கப்பட்டது.

ஓதல் என்கிற மந்திரக் கலை, தமிழ்முன்னோரால், மூன்று அகவைக்குள் குழந்தை- மொழிகற்றலில் இருந்து உருவாக்கப்பட்டது.

ஓகக்கலை உடல் நலத்திற்கான பயிற்சியாகும்.

ஓதல் என்கிற மந்திரக் கலை வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கடவுளிடம் கேட்பது ஆகும்.

ஓகக்கலை வடமொழிப் பெயர்களோடு முழுமையாகக் கிடைக்கிறது. ஐயா பொழிலன் அவர்கள், 'தமிழில் ஓகம் பயில்வோம்' என்கிற தலைப்பில் அச்சு நூலொன்றை மன்பதை பதிப்பகம் மூலம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்.

ஆனால் ஓதல் என்கிற மந்திரக்கலை முழுமையாகக் கிடைக்கவில்லை. நடப்பில் இருக்கிற ஓதல் வடமொழிப் பெயர்களோடு முழுக்க முழுக்க கற்பனையாக கட்டமைக்கப்பட்ட நடைமுறைகளைக் கொண்டுள்ளது.

எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே என்று தமிழ்முன்னோர் கொண்டாடுகிற தமிழின் ஒவ்வொரு சொல்லிலும் ஓதல் என்கிற மந்திரக் கலைக்கான செய்தி பொதிக்கப்பட்டுள்ளது. மந்திரத்தை நாம்தாம் முழுமையாகக் கட்டமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

தியானம் என்று தலைப்பிட்டு கூகுளில் தேடினால் 43 நொடிகளில் முப்பத்தி நான்கு இலட்சத்து இருபதாயிரம் முடிவுகள் கிடைக்கின்றன. இந்த முடிவுகள் அனைத்திலும் நடப்பில் உள்ள அந்தக் கற்பனை கட்டமைப்பைக் காணமுடியும்.

இதை இந்தியாவில் முதன்மையான ஐந்து வழிகாட்டிகள் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுக்குப் பின்னால் தொடர்கிறவர்களுக்கு அந்தக் கற்பனை கட்டமைப்பிலும் உறுதியாகப் பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறதாலேயே அவர்கள் நிற்க முடிகிறது என்பது நடப்பு உண்மையாகும்.

கற்பனைக் கட்டமைப்பில் பலனா? என்று வியப்பை விழியில் நிறுத்தினால், எப்படி சாத்தியமாகிறது என்பது ஓதல் கலையை கட்டமைக்கும் நமது முயற்சியில் தெளிவாகக் கிடைக்கிறது. 

இயல்அறிவில் (சயின்ஸ்) பாதுகாப்பு நடவடிக்கை (சேப்டிபிரிகாசன்) போல, மருத்துவத்தில் தடுப்பு ஊசி போல, நமது வாழ்க்கை இயக்கத்தில் காப்புமந்திரம் கட்டி அன்றாடம் ஓதி இருக்க வேண்டியது கட்டாயம் என்கிறது இயல்கணிப்பு அல்லது இயல்கணக்கில் தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரம். தமிழ்மக்கள் அனைவரும் அன்றாடம் ஓதிவரும் வகைக்கு பொதுவானதொரு காப்புமந்திரத்தை கட்டி அளிப்பதற்கானது இந்தத் துணைக் கட்டுரை. 

இதுவரை உங்களுக்கு கிடைத்திருந்தது அனைத்தும் நீங்கள் கடவுளிடம் கேட்டது மட்டுமே என்பது மந்திரம் நிறுவியுள்ள செய்தியாகும். ஒவ்வொரு தற்பரை நேரமும்- செயலாளும், எண்ணத்தாலும், தமிழாலும் (எண்ணமொழி அல்லது தாய்மொழி) கடவுளிடம் கேட்டிருப்பதே மந்திரம் ஆகும். இந்த மூன்றுவகையாக கடவுளிடம் பதிவு செய்யப்படுகிற நம்மந்திர இயக்கம், கடவுளில் பதிவாக, அந்த இயக்கத்தால் இயக்கம் பெற்ற கடவுள் நம்மை முயக்குகிறது. 

நாம் அன்றாடம் ஆற்றிவருகிற கடமைகள் செயல்பதிவு ஆகும். ஒவ்வொரு தற்பரை நேரமும் நம் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கிற சிந்தனை எண்ணப்பதிவு ஆகும். உறுதியான கடவுள் கேட்பாக அமைகிற நம்முடைய தெளிவான பதிவு தமிழின் (எண்ணமொழி அல்லது தாய்மொழி) மூலமே கடவுளில் பதிவாகிறது. 

தமிழ்மக்கள் அனைவருக்கும் பொதுவான இந்தக் காப்பு மந்திரத்தை அன்றாடம் ஓதிவாருங்கள் என்று அறிவுறுத்தி மகிழ்கிறோம். தற்போதைக்கு தமிழ்க் குடும்பங்கள் அனைத்திலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும், பொங்கல்விழாவுக்கு முந்தைய நாளில் காப்புக்கட்டு என்ற தலைப்பில் இந்த காப்பு மந்திரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

உறுதியான கடவுள் கேட்பாக அமைகிற, நாம்நம், தமிழின் மூலம் கட்டமைக்கிற,  நம்முடைய தெளிவான பதிவுக்கான, காப்புமந்திரம் 
கடவுளே! 
விசும்பு தெய்வமே! 
எனக்கும் என் மனைவி குமுதாவிற்கும் 
என் மகன் செழியனுக்கும் 
என் மருமகள் ஓவியாவிற்கும் 
என் பேரப் பிள்ளைகள் நிலாவிற்கும் பெருவழுதிக்கும் 
என் மகள் எழல்மதிக்கும் 
என் மருமகன் ஆதவனுக்கும் 
என் பேரப்பிள்ளைகள் புதியனுக்கும் வெண்பாவிற்கும் 
உடல் நலத்தையும், 
மன மகிழ்ச்சியையும் 
பொருளாதார முன்னேற்றத்தையும் 
பேரளவான ஊக்கத்தையும், 
பயண உதவி வண்டிகளில் பாதுகாப்பையும் 
வழங்கி ஆவன செய்ய வேண்டுகிறேன். 
கடவுளே! 
விசும்புதெய்வமே! 
அருள் செய்க. 
என்று இரண்டு முறையோ ஐந்து முறையோ அன்றாடம் ஓதி வாருங்கள் இந்த மந்திரக்காப்பில் உறவு முறைகளையும் உறவுகளின் பெயரையும் உங்களுக்கானவைகளாக மாற்றி மந்திரம் கட்டிக்கொண்டு அன்றாடம் ஓதி வாருங்கள். 

நீங்கள் திருமணம் ஆனவர் என்றால்- நீங்கள், உங்கள் தலைவி, உங்கள் பிள்ளைகள், உங்கள் மருமக்கள், உங்கள் பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு நீங்கள் மந்திரக்காப்பு கட்டலாம். 

நீங்கள் திருமணம் ஆகாதவர் எனில்- நீங்கள், உங்கள் தாய், உங்கள் தந்தை, உங்கள் அக்கா, உங்கள் தங்கை, உங்கள் அண்ணன் உங்கள் தம்பி, அண்ணன் அக்காவின் துணைகள் மற்றும் பிள்ளைகள் ஆகியோருக்கு நீங்கள் மந்திரக்காப்பு கட்டலாம். 

தனிமனித முன்னேற்றத்திற்கு தமிழ்முன்னோர் தொடர்ச்சியாக மூன்று கலைகளை முன்னெடுத்தனர். அவை 1. சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம். 2. கணியம். 3. மந்திரம் என்பனவாகும். அவற்றுள் மூன்றாவது முன்னேற்றக் கலையான மந்திரமே நிறைவான கலையாகும்.

மந்திரக்கலையை, உங்கள் தலையெழுத்தை நீங்களே எழுதிக் கொள்வதற்கான கலையாகவே தமிழ்முன்னோர் கட்டமைத்துள்ளனர். ஆனால் நடப்பில்நாம்- வழிகாட்டிகளுக்கு நம்மை ஒப்புக் கொடுத்து, அவர்கள் நமக்காக கடவுளில் ஓதக்கேட்டு பலன் அடைந்து வருகிறோம். 

நாம் ஒப்புக் கொடுத்தால், நமக்காக யாரும் மந்திரம் ஓதி, நமக்கு பலன்பெற்றுத் தரமுடிகிறது என்பதும் மந்திரம் கொண்டிருக்கும் அடிப்படை செய்தியாகும். 

ஆனால் நாமாக நமக்கு ஓதும் மந்திரம், நேரடியாக நமக்குப் பலன்தரும் என்பதும், நமது ஏழு தலைமுறைக்கும் பலனை எடுத்துச் செல்லும் என்பதும், மந்திரம் கொண்டிருக்கும் அடிப்படை செய்தியாகும். 

நமக்காக பிறர் ஓதும் மந்திரம் நம்மை அவரைத் தொடர்வோரின் வரிசையில் நிறுத்தும் என்பதும், நமது அடுத்த தலைமுறையை அது முன்னெடுக்காது என்பதும் மந்திரம் கொண்டிருக்கும் அடிப்படை செய்தியாகும். 

இங்கே நான் யார் என்றால், உங்களுக்காக மந்திரம் கட்டும் வழிகாட்டி அல்லன். உங்களுக்கு நீங்களே மந்திரம் ஓதிக்கொள்ளும் வகைக்கு, மந்திரம் அடிப்படைகளைத் தௌ;ளத்தெளிவாக கற்றுக்கொடுக்க முனைந்திருக்கும் மந்திரம் ஆசிரியனே. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,709.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.