Show all

தமிழ் படித்தால் தரணி ஆளலாம்!

தமிழ் மொழி உலகின் தொன்மையான செம்மொழியாகத் திகழ்கிறது. ஆனால் தமிழில் கல்லூரிக் கல்வியைப் படிப்பது இன்னமும் பெருமைக்குரியதாக இல்லை என்பது வேதனை அளிப்பதாகும். ஆனால் தமிழில் பட்டம் பெறுபவர்கள் தரணியாள முடியும் என்பதற்கு தமிழகமே சான்றாக உள்ளது. நமது தாய்மொழியான தமிழின் சிறப்புகளை அறியவும், அதை உலகிற்கு எடுத்துச் சொல்லவும் தமிழ் இலக்கிய படிப்புக்கள் உதவுகின்றன. தமிழில் கலை இளவல் (பி.ஏ.) முதல் முனைவர் (பிஎச்.டி.) பட்டம் வரை பயிலலாம். உடன் கல்வியியல் பட்டமும் படிப்பவர்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. கலை இளவல், கல்வியியல் இளவல், கலை முதுவர், கல்வியியல் முதுவர், பயிலுவோருக்கு உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழாசிரியர் பணிகள் கிடைத்து வருகின்றன. அனைத்துக் கல்வி நிலையங்களிலும் தமிழ் ஆசிரியர் தேவை உள்ளது. இதேபோல கலை, அறிவியல் கல்லூரிகளிலும் தமிழ்ப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடத்துக்கு தமிழ் தத்துவயியல் முனைவர், தத்துவயியல் அறிஞர் படித்தோர் தேர்வு செய்யப்படுகின்றனர். இவை தவிர பல்வேறு துறைகளில் தமிழ் பயிலுவோர் கோலோச்சுகின்றனர். குறிப்பாக அரசின் பல்வேறு துறைகளில் தமிழ் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எளிதாகக் கிட்டுகின்றன. தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழில் பயின்றோர் எளிதாக வெற்றி பெற முடியும். தமிழ் படிப்பவர்களுக்கு தமிழாசிரியர், பேராசிரியர் பணிகள் மட்டுமே கிடைக்கும் என்பதெல்லாம் பழைய காலம். இன்றைக்கு பல நிலைகளில் தமிழ் படித்தால் சிறப்பான பணிகளைப் பெறலாம். ஊடகங்களில் வாய்ப்பு ஊடகங்கள் மொழியை நம்பியே இருக்கின்றன. எழுத்து, பேச்சு என்கிற இரு நிலைகளிலும் தமிழ் படித்தோருக்கான வேலை வாய்ப்புகள் நிரம்ப இருக்கின்றன. குறிப்பாக, இதழியல் துறையில் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. பத்திரிகைகள், சின்னத்திரை, வானொலி, பண்பலை - இவற்றில் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் தமிழர்கள் வாழும் இடங்களிலும் தமிழ் படித்தோருக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. இன்று ஊர்தோறும் தனியார் தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகளை நடத்தியாக வேண்டிய நெருக்கடி உள்ளது. நிகழ்ச்சித் தொகுப்பு, செய்தி வாசிப்பு, நிகழ்ச்சித் தயாரிப்பு ஆகிய பணிகளில் தமிழ்ப் பட்டதாரிகள் கோலோச்ச முடியும். பிரசித்தி பெற்ற பி.பி.சி, சீனா, ஜப்பான், இலங்கை, ஆஸ்திரேலியா, அமெரிக்க வானொலிகளில் தமிழ் மொழிப் பிரிவு உள்ளது. அங்கும் தமிழ் கற்றறிந்தோருக்கு அதிக ஊதியத்துடன் கூடிய பணிகள் கிடைக்கின்றன. தவிர தற்கால விளம்பரத் துறையிலும் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் காணப்படுகின்றன. மேலும், கணினி அச்சுத் தொடர்பான நிலைகளில் பழந்தமிழ் இலக்கியங்களை அச்சிடுதல், மின்னுருவேற்றல் போன்ற நிலைகளில் மரபார்ந்த செம்மையான தமிழறிவு பேரளவில் உதவும். தமிழோடு பிறமொழி அறிவும் இருப்பின் சிறப்பான ஊதியம் பெறலாம். மொழிபெயர்ப்பு பெரிய அளவில் வளர்ந்து வரும் துறையாக உள்ளது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் தமிழ் என்றைக்கும் பணி வாய்ப்பளிக்கும் பாடமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் ஓதுவார்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு சிறப்பான தமிழறிவு தேவைப்படுகிறது. கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான ஸ்லெட், நெட் தேர்வுகளில் தமிழ் ஆய்வு பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வியை நிறைவு செய்யும் வரை மாதம் ரூ. 6,000 முதல் ரூ. 12,000 வரை பல்கலைக்கழக மானியக் குழு ஊக்கத் தொகை தருகிறது. அதேபோல, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கலை முதுவர் தமிழ் பட்டப்படிப்பில் சேருவோருக்கு என தனியாக கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. தமிழர்கள் உலகம் முழுவதும் தற்போது தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளிலும் பணி நிமித்தமாக குடிபெயர்ந்து வசிக்கின்றனர். அங்கு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் மறந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழ் கற்பிக்கும் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அங்கும் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறாக, உலகம் முழுவதும் தமிழ்ப் படிப்புக்கு மிகுந்த வரவேற்பான நிலை உள்ளது. தமிழ் படிக்கும் மாணவர்கள், இதை உணர்ந்து தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொண்டால் சிறப்பான எதிர்காலம் நிச்சயமாக உண்டு. நடப்பு நிலையில்- கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக கூலித் தளத்தில் இயங்கி வரும் தமிழனுக்கு, இது- தமிழ் படித்தும் நிருவாகக் கூலியாக அதிக ஊதியம் பெற முடியும் என்கிற ஆறுதல் செய்தியாகும். ஆனால் தமிழ்தாம் படிக்க வேண்டும்! தமிழில்தாம் படிக்க வேண்டும்! பிற மொழிகள் எத்தனை வேண்டுமானாலும் படிக்கலாம்! பிற மொழியில் படிக்கவே கூடாது. பிற மொழியில் படிப்பது என்பது- எந்தப் பிற மொழியில் படிக்கிறோமோ, அந்தப் பிற மொழியாளனை உடைமையில் நிறுத்தி, தம்மின மக்களை உடல் உழைப்புத் தளத்தில் வீழ்த்தி, அந்தப் பிற மொழியாளனுக்கு ஏவல் பணி புரிவதற்கு மட்டும் தாம் அந்த மொழி வழி படிப்பு பயன்படும். எனவே, பிற மொழிகள் எத்தனை வேண்டுமானாலும் படிக்கலாம்! பிற மொழியில் படிக்கவே கூடாது. நடப்பு நிலையில்- தமிழகத்தில் கடுமையான முயற்சியோடு உடைமைத் தளத்தில் இயங்கி வரும் மிகச்சிலரும் பிறமொழி நிருவாக அறிவு கல்வியில் தொடர இயலாதவர்களாக, தமிழ் எழுத பேசத் தெரிந்த தகுதியோடு மட்டும் களத்தில் இறங்கி, உடைமைத் தளத்தில் வெற்றி பெற்றவர்களே. ஆக உடைமைக் கல்விக்கான மொழி, தாய்மொழி தமிழே என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக புலப்படுகிறது இல்லையா? இவர்கள், தமிழில் படித்திருந்தால்- இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன் எப்படி உலகை ஆண்டு கொண்டிருந்தானோ அப்படி இன்று உலகை இவர்கள் உலகை ஆண்டு கொண்டிருப்பார்கள். இன்றைக்கு இருக்கிற கல்வி அயல் மொழியில் நிருவாக அறிவுக்கானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கரிகாலனும், காக்கை பாடினியும். தொல்காப்பியரும், திருவள்ளுவரும், சாத்தனாரும், கங்கை கொண்டவனும், கடாரம்வென்றவனும் கற்ற கல்வி ஆக்க அறிவுக்கான தாய்த்தமிழ் உடைமைக்கல்வி. தாய்த் தமிழ் ஆக்க அறிவுக்கான உடைமைக்கல்வி மீட்போம். பனையாக தமிழன் தரணியில் உயர்ந்து நிற்போம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.