Show all

மனித வாழ்க்கையின் முதன்மை நோக்கம் என்ன?

மனித வாழ்க்கையின் முதன்மை நோக்கம் என்ன என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

04,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். அந்த இரண்டில்- இடம் எனப்படுவது எல்லையும், தான்தோன்றி இயக்கமும் அற்ற வெளி ஆகும். காலம் எனப்படுவது மிக மிக நுட்பமான, மெய்யெழுத்துக்கள் என்று தமிழ் நிறுவியுள்ள க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் போன்ற மெய் ஆன, குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமைந்த தனி ஒன்றுகள் ஆகும்.

அம்மா என்பதில் ம்ம் என்கிற இரண்டு மெய்களின் கூட்டியக்கம் அஆ என்கிற உயிரைப்பெறுகிறது. 
தமிழ் என்பதில் த்ம்ழ் என்கிற மூன்று மெய்களின் கூட்டியக்கம் அஇ என்கிற உயிரைப் பெறுகிறது.
மந்திரம் என்பதில் ம்ந்த்ர்ம் என்கிற ஐந்து மெய்களின் கூட்டியக்கம் அஇஅ என்கிற உயிரைப் பெறுகிறது. 

இந்த உயிரைக் கொடுப்பது இடம் ஆகும். இயக்கம் இல்லாத இடத்திற்கு, காலத்தின் தனி ஒன்றுகள் இரண்டாக பலவாக இணைகிற பொழுது இயக்கத்தைக் கொடுக்கிறது. இடத்தில் காலம் கொடுத்த இயக்கம் முயக்கமாகி இடம் காலத்திற்கு கொடுக்கிற முயக்கம் உயிர் ஆகும்.

இப்படித் தனி ஒன்றுகள் இணைந்து உருவானவைகளே நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்கள் ஆகும். திரம் என்பது திரட்சி, திரண்டிருத்தல் என்கிற சொற்களில் உள்ளது போன்ற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கூட்டியக்கம் ஆகும். 

நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கும் வேறுவேறாக இருப்பதற்கு எண்ணிக்கை மாற்றமே காரணம். எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு காரணம் என்று தமிழ்முன்னோர் நிறுவிய இரண்டாவது முன்னேற்றக் கலையான கணியமும், உலகினரின் இயல்அறிவும் (சயின்ஸ்) ஒப்புக் கொள்கிறது. இயல்அறிவின் இந்த வகை ஒப்புதலை தனிமப் பட்டியல் தெளிவுபடுத்தும்.

ஒவ்வொரு கூட்டியக்கத்திற்கும் உயிர் கொடுக்கிற இடத்தின் மூன்று நிலைகளான வெளி, விண்வெளி, விசும்பில்- விசும்பை நிலம், நீர், தீ, காற்று மாதிரி திரம் என்று நிறுவிகின்றனர் தமிழ்முன்னோர். நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களுக்கு தான்தோன்றி இயக்கம் உண்டு. இவைகளின் இயக்கத்தால் இயக்கம் பெற்று இவைகளை எதிரியக்குகிற முயக்கம் உண்டு விசும்புக்கு. அந்த வகையில் தமிழ்முன்னோர் திரங்களை நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என ஐந்திரம் என்கின்றனர். 

இந்த ஐந்திரங்களை அதன் இருப்பு அடிப்படையில், கடவுள் என்றும் இறை என்றும் இருவகைப்படுத்துகின்றனர் தமிழ்முன்னோர். கடந்தும் உள்ளும் இருப்பதை இருப்பாகக் கொண்டுள்ள இடத்தை கடவுள் என்றும், இறைந்திருத்திருத்தலை இருப்பாகக் கொண்டுள்ள நிலம், நீர், தீ, காற்று அகிய நாற்திரங்களைக் இறையென்றும் பேசுகின்றனர்.

இந்த அடிப்படை நிலையிலிருந்து கிளைக்கிற புது புது கூட்டியக்கங்களை தெய்வம் என்கின்றனர் தமிழ்முன்னோர். இந்த அடிப்படையில் கடவுள் ஒன்று, இறை நான்கு, தெய்வங்கள் பல என நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். 

இந்த தெய்வங்களின் முதலாவது நிலை ஓரறிவு உயிரி ஆகும். அடுத்தடுத்து மனிதன் வரை தெய்வங்கள் புதுப்புது கூட்டியக்கங்களாகக் கிளவியாக்கம் பெற்றுள்ளன. 

ஆக மனிதன் நிலைவரை, இயற்கையின் முதன்மை நோக்கம் வளர்தல் ஆகும் என்பதைக் இந்தக் கட்டுரையின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,556.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.