Show all

அன்றாடம் நாம் ஓதவேண்டிய ஐந்து மந்திரங்கள்!

மனஆற்றல் மூலம் செயலை முன்னெடுக்க விசும்பின் இயக்கவிதியை பயன்படுத்திக் கொள்வதே மந்திரம் ஆகும். அந்த வகைக்கு ஐந்து அடிப்படை மந்திரங்கள் குறித்து பேசுகிறது இந்தக் கட்டுரை.

மந்திரக்கலை- நமது தலைஎழுத்தை, நமது விதியை நாமே எழுதிக் கொள்வதற்கானதாகும். இதில் நமக்காக என்று யார் எழுதுவதும், நமக்கான வாழ்த்தாக அமைய முடியுமே யன்றி அது நமக்கான மந்திரமாகாது. மாறாக வாழ்த்துகிறவர்களுக்கான மந்திரமாக அது அமையும். இது குறித்து 'ஐந்தாவது மந்திரம்- வெற்றியைக் கொண்டாடுதல்' என்கிற தலைப்பில் பிற்பகுதியில் அறிந்து கொள்வோம்.

மந்திரத்தில் எண்ணுவது என்கிற பகுதி எண்பது விழுக்காட்டு முன்னேற்றத்தையும், திண்ணியராதல் என்கிற பகுதியில் நூறு விழுக்காட்டு முன்னேற்றமும் சாத்தியம் என்கிறது ஓர் ஒன்னே முக்கால் அடி திருக்குறள்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

உங்களின் எந்தத் தேவைக்கும் வெற்றிக்கும் அதை நீங்கள் நினைக்க வேண்டும். அப்படி நினைப்பதோடு விட்டு விடாமல் அந்த நினைப்பு உங்களிடம் கேட்கும் வேலைகளை நீங்கள் கட்டாயம் முடித்துத் தரவேண்டும் என்பதே இந்த திண்ணியராதல் என்பதற்கான விளக்கமாகும். 

நீங்கள் உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும், நீங்கள் முன்னெடுக்கும் பதிவில், உங்களுக்கு அந்த வகைக்கான நிறைவேறலுக்கு, நிறைய கேட்புகள் உங்கள் எண்ணத்தில் மீட்டப்படும். அவைகளை நீங்கள் கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும். என்பதே இந்த திண்ணியராதல் என்பதற்கான விளக்கமாகும்.

உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும், நீங்கள் முன்னெடுக்கும் பதிவு எதுவாக அல்லது எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதே அன்றாடம் நாம் ஓதவேண்டிய ஐந்து மந்திரங்கள் கட்டுரை பேசும் செய்தியாகும்.

ஒவ்வொரு நாளும் ஒரு எட்டு மணி நேரமாவது ஒவ்வொரு மனிதனுக்கும் உறக்கம் தேவையாய் இருக்கிறது. அந்த உறக்கம் நமது உடலுக்கானது அல்ல. நமது உள்ளத்திற்கானது. 

அதனால் நீங்கள் உறங்கி எழும்போது முதலில் விழிப்பது உங்கள் எண்ணமே. எண்ணம் என்பது என்ன? உங்கள் மொழி. அந்த உங்கள் மொழி- ஒன்றிய அரசில் பதவியில் உள்ள ஹிந்தி வெறியர்கள் திணிக்கிற ஹிந்தி மொழியா? இல்லை! உங்கள் முளையிலேயே உங்கள் கல்வியில் திணித்துக் கொண்டிருக்கிறதே உங்கள் சமூகம், அந்த ஆங்கிலமா? இல்லை! 

உங்கள் தாய் தன் குருதியை பாலாக்கி உங்களுக்குத் தந்த உங்கள் உடலும், உங்கள் தாய் தன் மூச்சுக்காற்றை மொழியாக்கி, 'தாய்மடி பல்கலைக்கழகத்தில்' உங்களுக்கு கற்றுத்தந்த தமிழும் உங்கள் தாய் உங்களுக்குத் தந்த முதல் உடைமைகள். உங்களுக்குக் கிடைத்த முதல் உடைமைகள் இரண்டில் ஒன்றான தமிழே உங்கள் மொழி!

படுக்கையில் இருந்து என்ன நினைத்துக் கொண்டு எழுவீர்கள்? அம்மா தாயே என்று நினைத்துக் கொண்டு எழலாம். முருகா என்று நினைத்துக் கொண்டு எழலாம். கர்த்தாவே என்று நினைத்துக் கொண்டு எழலாம். அல்லாவே என்று நினைத்துக் கொண்டு எழலாம். பெருமாளே என்று நினைத்துக் கொண்டு எழலாம். இப்படி உங்கள் முனைப்பு எதுவானாலும் உங்கள் உயிர்ப்பு தமிழே! 

நாம் நமது முனைப்புகளுக்கும் முனைப்புகளில் வெற்றிகளுக்கும் இரண்டாவதாக மூன்றாவதாக என்று எத்தனையாவதாக வேண்டுமானலும் மந்திரக்கட்டுக்கு இடம் தரலாம். அனால் நாம் கட்ட வேண்டிய முதல் மந்திரம் நமது உயிர்ப்பான தமிழுக்காக இருக்க வேண்டும்.

நீங்கள் சார்ந்திருக்கும் முனைப்புகளுக்கு நீங்கள் கட்டும் மந்திரம்- உங்களுக்கு மட்டுமானதாக, உங்கள் 58 அகவை வரைக்கானது மட்டுமாக மட்டுமே அமையும். ஆனால் நீங்கள் உங்கள் உயிர்ப்பான தமிழுக்காக கட்டும் மந்திரம் இந்த உலகம் பெருவெடியில் முடிந்து போகும் காலம் வரைக்கும் உங்கள் அனைத்து தலைமுறைகளுக்கும் வேராக நின்று பயன்தரும். 

மந்திரக்கலைக்குத், தமிழர்கள் பாடநூலாக கொண்டாடும் வகைக்கான திருக்குறள், தமிழுக்கே தமிழின் முதல் எழுத்தான அகரத்திற்கே மந்திரம் கட்டி அடுத்தடுத்த குறள்களைத் தொடர்கிறது.  

அகர முதல! (என் தாய்த்தமிழுக்கு முதலான அகரம் வாழ்க)
எழுத்தெல்லாம் (ஒட்டுமொத்த தாய்த்தமிழ்)
ஆதி பகவன் (தமிழன் கண்ட முதல் கோளான ஞாயிறு)
முதற்றே உலகு (கோள்களுக்கு எல்லாம் முதலானது போல)

நீங்கள் உறக்கத்தில் இருந்து விழித்ததும், உங்கள் தொடர் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த, கட்ட வேண்டிய முதல் மந்திரம், தமிழ் வாழ்த்தாகவே அமைய வேண்டும். 

நீங்கள், உங்கள் சொந்த முயற்சியில், சொந்த அனுபவத்தில் ஒரு மொழி வாழ்த்தைக் கட்டுவது சிறப்பு. 

அதுவரை திருவள்ளுவரின் மொழி வாழ்த்தான 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்ற குறளையோ, 
சுந்தரனாரின் 
நீராருங் கடலுடுத்த என்கிற தமிழ்நாடு அரசின் தமிழ்நாட்டு அடையாளப் பாடலையோ,
சங்கே முழங்கு என்கிற பாவேந்தர் பாரதிதாசன் பாடலையோ 
பெருஞ்சித்திரனாரின் மொழி வாழ்த்தான
அன்னை மொழியே  
அழகான செந்தமிழே  
முன்னைக்கும் முன்னையான நறுங்கனியே   
கடல்கொண்ட குமரிக் கண்டத்தில் அரசாண்ட மண்ணுலகப் பேரரசே
பாண்டியனின் மகளே  
திருக்குறளின் பெருமைக்குரியவளே  
பத்துப்பாட்டே  
எட்டுத்தொகையே  
பதினெண் கீழ்க்கணக்கே   
நிலைத்த சிலப்பதிகாரமே 
அழகான மணிமேகலையே 
நினைவுகளால் தலை பணிந்து வாழ்த்துகின்றோம்.
என்கிற பாடலைக்கூட முதல் மந்திரமாக ஏற்று, 
தமிழை ஒவ்வொரு நாள் அதிகாலையும் 
வாழ்த்திப் பாடி வாழ்க்கையின் வெற்றியை வென்றெடுக்கலாம்.

முதலாவது மந்திரம் தமிழ்வாழ்த்தை மிக மிக எளிமையாக முன்னெடுக்க-  
காலை படுக்கையைவிட்டு எழுகிற போதே, 'என் எண்ணத்தின் பேச்சும், எழுத்தும், இயக்கமும், அடையாளமும் ஆன தமிழ் வாழ்க!' என்று இரண்டுமுறை வாழ்த்தி எழுங்கள் போதும்.

இரண்டாவது மந்திரம்:
நமக்கு நமது தாய் தந்த இரண்டு உடைமைகள்: அவளின் குருதிப்பாலில் வளர்ந்த நம் உடம்பும் அவளின் மூச்சுக்காற்றில் நாம் கற்ற தமிழ்மொழியும். முதலாவது மந்திரத்தை தமிழுக்கே எழுத வேண்டும் என்றும், ஏன் என்றும் முதலாவது மந்திரம் என்கிற தலைப்பில் விளங்கிக் கொண்டுள்ளோம். அடுத்து இரண்டாவது மந்திரத்தை நமது உடம்புக்கு எழுதவேண்டுவது குறித்து விளங்கிக் கொள்வோம்.

தமிழில் உடம்பை பேணுவதற்கு நலங்கு என்கிற ஒரு நடைமுறை பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
நலங்கு பாடவா பாடவா பாடவா
பொன் விலங்கு சூடப்போகும்
நேரத்திலே ஆடவா
நலங்கு பாடவா பாடவா 
நலங்கு பாடவா பாடவா 
என்றெல்லாம் பாடப்பட்ட பாடல்கள் எல்லாம் தற்போது நடைமுறையில் இல்லாமல் போய்விட்டது. 

வளைகாப்பு, திருமணம் ஆகியவற்றின் போது கருவுற்றுள்ள தாயுக்கும், மணமக்களுக்கும் நலங்கு வைத்து அவர்களுக்கு காப்பு செய்கிற முறை தொடர்ந்து வந்து கொண்டுதாம் இருக்கிறது. 

மகளிரின் பூப்பு நன்னீராட்டின் போதும் நலங்கு வைக்கிற முறைமை தொடர்கிறது. 

குழந்தைகளுக்கு ஐம்பொன், வசம்பு வளைவியால் காப்பு செய்து நலங்கு பேணுகிற முறையும், பொங்கலின் போது ஆவாரை, பீளைப்பூ, வேப்பங் கொழுந்து அகியவைகள் மூலம் காப்பு கட்டி நலங்கு செய்கிற முறையும் தொடர்ந்தே வருகிறது. 

அம்மன் கோயில் திருவிழாக்களில் பூ மிதிக்கிறவர்களுக்கும், காவடி எடுக்கிறவர்களுக்கும், திருமணத்திற்கு முன்பு மணமக்களுக்கும் கங்கணம் கட்டி நலங்கு பேணுகிற முறையும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இவையெல்லாம் முன்னிலை, பாடர்க்கையில் தமிழ்மக்கள் நலங்கு பேணுகிற முறையாக உள்ளது. 

ஆனால் ஒவ்வொருவரும் தனக்கு என்று நலங்கு பேணுகிற முறை ஒரு நடைமுறையாக முன்னெடுக்கப் படுவதில்லை. தற்போதைக்கு நாம் உடம்பு சரியில்லாமல் போனால் மட்டும் மருத்துவரை நாடுகிறோம். 

நமது நலங்காக இருப்பது பல்துலக்குதலும், குளித்தலும் மட்டுமாக உள்ளது. உணவு பேணல் கூட அவ்வளவாக இல்லை. நாம் சுவைக்காக சாப்பிட்டு வருகிறோம். 

எது எப்படி இருந்தாலும் சரி. பல் துலக்குவதற்கும், குளிப்பதற்கும் முன்பு உங்கள் தாய் உங்களுக்குத் தந்த முதல் உடைமையான உடம்புக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதாக ஒரு மந்திரத்தைக் கட்டி அன்றாடம் ஓதி வாருங்கள். 

இந்த வகைக்கு உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்பார் திருமூலர் அவர்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்பது தமிழ்ப் பழமொழியும் கூட.

நாம், கட்டி ஓதும் மந்திரம் விசும்பில்தான் பதிவாகிறது. நமது பதிவு எதற்கானதோ அதை விசும்பு நமக்கு ஒருங்கிணைத்துத் தருகிறது. ஆகவே நமது மந்திரம் விசும்புத் தெய்வமே என்று தொடங்கப்பட வேண்டும். இரண்டாவது மந்திரத்தில் நமது தேவை நமது உடலுக்கான நலங்கு ஆகும். ஆக 'விசும்புத் தெய்வமே! என்னின் அடிப்படையான உடலுக்கு நலங்காற்றி நலம் தருக’ என்று ஒவ்வொரு நாள் காலையிலும் பல் துலக்குவதற்கும், குளிப்பதற்கும் முன்பாகவே இரண்டு முறை ஓதிவிடுங்கள்.

மூன்றாவது மந்திரம்- குடும்பத்திற்கான காப்புக்கட்டு! 
நமக்கு நம் தாய் தந்த இரண்டு உடைமைகள்: ஒன்று, அவளின் குருதிப்பாலில் வளர்ந்த நம் உடம்பு இரண்டு, அவளின் மூச்சுக்காற்றில் நாம் கற்ற தமிழ்மொழி. முதலாவது மந்திரத்தை தமிழுக்கே எழுத வேண்டும் என்றும், இரண்டாவது மந்திரத்தை நமது உடம்புக்கு எழுதவேண்டுவது குறித்தும் முதலாவது இரண்டாவது மந்திரங்கள் எழுதும் முறையை முன்னெடுத்தோம். அடுத்து நாம் கட்டவேண்டிய மூன்றாவது மந்திரம். நமது குடும்பத்திற்கு ஆகும். 

குடும்பம் தமிழர் உலகிற்கு அளித்த கொடை. ஒவ்வொரு ஆண் மகனுக்கும் ஒவ்வொரு பெண் மகளுக்கும் தலைவன் தலைவி என்கிற அதிகாரம் கிடைக்கும் ஒரு மாதிரி சமுதாயம் குடும்பம் ஆகும். அந்தக் குடும்பத்தின் தலைவன் தலைவி பேரளவான பொறுப்புகளை கொண்டு இயங்குகின்றனர். 

குடும்பத்தின் தலைவன் (தலைவி) ஆகிய நீங்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அமைதியான நேரத்தில் நீங்கள் உங்கள் மனைவி, (கணவன்) உங்கள் பிள்ளைகள், மருமக்கள், பேரக்குழந்தைகள் அனைவரும் நலமாகவும், பாதுகாப்பாகவும், அனைத்து வகையான வளத்தோடும் இன்றைய நாளை எதிர்கொள்ள வேண்டும் என்று வாழ்த்துங்கள். 

இதற்கான ஒரு மந்திரத்தை உங்கள் சொந்த கருத்தில் சொந்த புலமையில், உரைநடை வடிவத்திலோ, செய்யுள் வடிவத்திலோ கட்டமைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஓதி வருங்கள். 

விசும்பு தெய்வமே! என்று விளித்து- நீங்கள், உங்கள் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரக்குழந்தைகள் அனைவரின் பெயரை தனித்தனியாக தெரிவித்து உடல்நலம், மனவளம், பொருளாதாரம், பேரறிவு, பயண உதவி வண்டிகளில் பாதுகாப்பு வழங்கி அருட்காப்பு அளிக்க இரண்டு முறை வேண்டுங்கள். இதை ஒவ்வொரு நாளும் ஒருமுறையாவது தொடரலாம்.

நான்காவது மந்திரம்- பயணத்திற்கான காப்புக்கட்டு! 
அடுத்து நமது பயணத்தின் போது முன்னெடுக்க வேண்டிய நான்காவது மந்திரம் குறித்து பார்ப்போம். பயணம் என்றதும் நம் நினைவுக்கு உடனே வருவது பாதுகாப்பு ஆகும். 

நமது வாழ்க்கையை வளமையாக்கிக் கொள்ளும் முன்னெடுப்பில் பயணம் முதன்மைத்துவமானதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் வெறுமனே நடையாக மட்டுமல்லாமல், நாம் உருவாக்கிக் கொண்ட அதிவேக கருவிகளில் அமர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது. அந்தப் பயணம் பாதுகாப்பாக அமைய, கட்டாயம் அந்தப் பயணப் பாதுகாப்பிற்கு ஒரு மந்திரத்தைக் காப்பாகக் கட்டி ஓதிடத் தேவையுள்ளது.

உங்களின் எந்தத் தேவைக்கும் வெற்றிக்கும் அதை நீங்கள் நினைக்க வேண்டும். நீங்கள் உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும் நீங்கள் முன்னெடுக்கும் நினைப்பில், உங்களுக்கு அந்த வகைக்கான நிறைவேறலுக்கு, நிறைய கேட்புகள் உங்கள் எண்ணத்தில் மீட்டப்படும். அதை நீங்கள் நிறைவேற்றித்தரும் வகைக்கு உங்களுக்கான வெற்றி சாத்தியமாகும். என்று மந்திரம் குறித்த ஒவ்வொரு கட்டுரையிலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம் என்பதை நினைவுக்கு கொண்டு வாருங்கள்.

பாதுகாப்பான பயணத்திற்கான நினைப்பில், நமக்கான முதன்மை கேட்பே சாலை விதிகள் ஆகும். அதில் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். வாழ்க்கையின் எந்தத் தளத்திலும் இல்லாத போட்டி பயணத்தில் இருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. 

பயணத்தில் பாதுகாப்பு கேள்விக் குறியாவதற்கு அடிப்படை காரணமே நமது கமிட்மெண்ட் என்கிற காலக்கட்டாயமேயாகும். நாளைக் காலை எட்டு மணிக்கெல்லாம் பயணத்தை முடித்துக் கொண்டு, வீடு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்கிற காலக்கட்டாயத்தை- பயணநேரத்திற்கு நெருக்கடி கொடுத்து, வேகத்தையும் ஓய்வின்மையையும் கூடுதல் ஆக்கிக் கொள்கிறோம். 

அத்தை வீட்டில் தாமதமாகிவிட்டது. அம்மன் கோயிலில் தாமதமாகி விட்டது, போக்கு வரத்து நெரிசலில் தாமதமாகி விட்டது. ஆனால் நமக்கு உபரியாக இருக்கிற ஒரே நேரம் ஓய்வுக்கான நேரம் அல்லது உறக்கத்திற்கான நேரம் மட்டுமே. அந்த ஓய்வின்மையும் அல்லது உறக்கமின்மையும் பயணத்தில் பாதுகாப்பு கேள்விக் குறியாவதற்கு காரணியாகி விடுகிறது.

பாதுகாப்பின் எச்சரிக்கை நோக்கில், குழந்தை பசியில் அடம் பிடிக்கிறது. அந்த அடிப்படையைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம். பாதுகாப்பின் எச்சரிக்கை நோக்கில், உங்கள் மகன், செல்பேசியை அல்லது மின்னேற்றியை அத்தை வீட்டிலேயே வைத்துவிட்டதாக கொஞ்ச தூரம் வந்ததும் தெரிவிக்கிறான். உங்கள் இருசக்கர துள்ளுவண்டியை சாவிபோடாமலே நீண்ட நேரம் முயற்சிக்கின்றீர்கள். வரும் வழியில் உங்கள் குழந்தை கரும்புச்சாறு கேட்டு அடம் பிடிக்கிறது. இப்படி வந்த நிறைய எச்சரிக்கைகளை புறக்கணித்ததைப் பயணத்தில் நிகழ்ந்த பெரிய கேள்விக்குறிக்குப் பின்பே அலசி அலசி அங்கலாய்க்கிறோம். தயவுகூர்ந்து பயணத்தின் போது உங்களுக்கு வருகிற சிறு சிறு எச்சரிக்கைக்கும் கட்டாயம் மதிப்பளியுங்கள். 

எக்காரணம் பற்றியும் பயணம் முடித்துத் திரும்பும் நேரத்தை மணிக்கணக்கில் துள்ளியம் காட்டாதீர்கள். சொந்த வண்டியில் இரவுப்பயணத்தை எப்போதும் தவிருங்கள். சொந்த வண்டியில் வண்டியோட்டும் உறவோடு பொழுதுபோக்காக பேச்சுக் கொடுத்துக் கொண்டே வாருங்கள். வண்டியோட்டும் உறவின் இணைஇருக்கையில் தூங்கிக் கொண்டு வருகிறவர்களை ஒருபோதும் அமர்த்தாதீர்கள். 

அடுத்து- பயணத்தில்நாம் கட்டவேண்டிய மந்திரத்திற்கு வருவோம். பயண மந்திரத்தில்- கடவுளிடம் அதாவது விசும்புத் தெய்வத்திடம், உங்கள் குலதெய்வத்தையும் முன்னிலைப்படுத்தி நேரடியாக அருள்செய்க என வேண்டுவது சிறப்பு ஆகும். 
கடவுளே! 
விசும்புத் தெய்வமே!
குலதெய்வமே!
எனக்கும் வண்டியை இயக்கும் என் உறவுக்கும்
உடன் பயணிக்கும் உறவுகளுக்கும் 
பயண உதவி வண்டிக்கும் 
பாதுகாப்பாய் வர வேண்டும்-
கடவுளே, விசும்புத் தெய்வமே, குலதெய்வமே அருள்செய்க 
என்று இரண்டு முறை ஓதி உங்கள் பயணத்திற்கு மந்திரக்காப்பு கட்டுங்கள். பயணம் நூறுவிழுக்காடும் பாதுகாப்பாய் அமையும். 
மேலே சொன்ன காப்புக்கட்டில் உங்கள் குலதெய்வத்தின் பெயரை சொல்ல வேண்டும். வண்டியை இயக்கும் உறவின் பெயரையும் சொல்ல வேண்டும். உடன் பயணிக்கும் உறவுகள் நண்பர்கள் அனைவரின் பெயரையும் சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் உங்கள் பயணம் பாதுகாப்பாய் அமைய எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

உங்கள் ஒவ்வொரு பயணத் தொடக்கத்தின் போதும், விசும்பு தெய்வமே! என்று விளித்து நீங்கள், உங்களுடன் பயணிப்பவர்கள், ஓட்டுநர், பயண உதவி வண்டி ஆகியோருக்கு பயணத்துனையாக அமையவும், பாதுகாப்பு வழங்கவும் அருட்காப்பு அளிக்க இரண்டுமுறை வேண்டுங்கள்.

ஐந்தாவது மந்திரம்- வெற்றியைக் கொண்டாடுதல்!
வெற்றியைக் கொண்டாடுதல் என்பது உங்கள் மந்திரத்தால் உங்களுக்குக் கிடைத்தவைகளை எண்ணிப்பார்த்து வாழ்த்துவதும் நன்றி பாராட்டுதலும் ஆகும். உங்களுக்குக் கிடைத்தவை அனைத்தும் நீங்கள் கேட்டவைகளே ஆகும். 

ஆகவே, ஒவ்வொரு நாளும், இரவு படுக்கையில், தூங்குவதற்கு முன்பு, அன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் வந்துபோன அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும் இரண்டுமுறை தெரிவியுங்கள். உங்களுக்கு உதவிய கருவிகளையும். உங்கள் பயணத்திற்கு உதவிய வண்டிகளையும் வாழ்த்துங்கள். மற்றவர்களை வாழ்த்துவது உங்களுக்கான மந்திரமாக ஒன்றுக்குப் பத்தாக பலன் அளிக்கும். 

எடுத்தக்காட்டாக- ஒரு பார்ப்பனர் தன்மொழியில் (சமஸ்கிருதம்) ஒரு பத்துபேருக்காக மந்திரம் ஓதும் போது, அவர் வளமடைகிறார். ஒரு நூறுபேருக்காக மந்திரம் ஓதும் போது, அவர் குடும்பமும் வளமடைகிறது. ஆயிரம் ஆயிரம் பேர்களுக்கு மந்திரம் ஓதும் போது, அவர் இனமே வளமடைகிறது. 

காரணம்: அவர் ஓதும் மந்திரம் அவருக்கானது. அதுவும் அவர் மொழியில் (சமஸ்கிருதம்) மந்திரம் ஓதுகிறார். அவர் ஓதுவது நமக்கான வாழ்த்து மட்டுமே. ஏனெனில்- அடுத்தவர்களுக்காக ஓதுவது மந்திரம் ஆகாது. அது வாழ்த்து மட்டுமே. 

உங்கள் உறவுகள் நண்பர்களோடு அதிகம் கலந்துரையாடுங்கள். அவர்கள் தேவைகளுக்காக நீங்கள் நிறைய வாழ்த்துங்கள். அந்த வாழ்த்துக்கள்:- நீங்கள் வளமடைய, உங்கள் குடும்பம் வளமடைய, உங்கள் இனம் வளமடைய நீங்கள், ஓதிய மந்திரமாக வினையாற்றும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.