Show all

அது ஒரு நிலான் காலம்-5

சுருக்கெழுத்தாளர் பதவி அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்ததே! இப்போதும் இருக்கிறதா? சொல்லித்தருவதற்குப் பல பயிற்சி நிறுவனங்கள் இருந்தனவே! அவைகளும் தற்போது காணப்படவில்லையே! ஏன்? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. இதில் என் சொந்த பாடுகள் கூடுதலாகப் பேசப்படுகிற காரணம் பற்றி, அது ஒரு நிலான் காலம்-5 என்பது இக்கட்டுரைக்கான தலைப்பாகிறது.

03,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5125: அந்தக் காலத்தில் சுருக்கெழுத்தருக்கு அத்தனை மதிப்பு இருக்கும். பேசுவதை உடனுக்குடன் எழுதுகிற முறையல்லவா சுருக்கெழுத்து முறை. அனைத்து அலுவலகங்களிலும் வேலைவாய்ப்பு பெறும் வகைக்கான தொழில்நுட்பப் படிப்பு அது. தட்டச்சுப் பயிற்சி பள்ளிகளில் சுருக்கெழுத்தும் பயிற்றுவிக்கப்படும். ஒரு புதிய மொழியின் எழுத்துமுறையை கற்றுக் கொள்கிற பாடு அதில் இருக்கும். ஆங்கில சுருக்கெழுத்து கற்றவர்களுக்கு ஆங்கில மொழிப்புலமை மிகக் கூடுதலாக இருக்கும் என்று ஆங்கிலச் சுருக்கெழுத்துக்குப் பெரிய மதிப்பீடு கற்பிக்கப்பட்டிருந்தது. 

நான் கூட ஆங்கில சுருக்கெழுத்தும், தமிழ்ச் சுருக்கெழுத்தும் படித்தேன். ஆங்கிலச் சுருக்கெழுத்து கற்றால் ஆங்கிலப் புலமை மிகும் என்பதை நானும் உணர்ந்தேன். ஆனால் என்னுடைய நோக்கம் தமிழ்ப்புலமை குறித்தானது அல்லவா! அதனால் தமிழ்ச் சுருக்கெழுத்து கற்பிப்பவர்களைத் தேடி அலைந்தேன். 

அந்தத் தேடலில் என் பக்கத்து வீட்டிலேயே முன்னெடுக்கப்பட்டு வந்த அம்சா தட்டெழுத்துப் பயிற்சிப் பள்ளியிலேயே தமிழ்ச்சுருக்கெழுத்தும் கற்றுத் தரப்படுகிறது என்கிற விடை கிடைத்தது. தமிழ்ச்சுருக்கெழுத்து கற்க அம்சா தட்டெழுத்துப் பயிற்சிப் பள்ளியில் இணைந்தேன். 

அந்தத் தட்டச்சு பயிற்சி பள்ளியில் தமிழ்ச் சுருக்கெழுத்து கற்க இணைந்தது, புதியதும் குதுகலமான பாடாகவும் அமைந்தது. அங்கே தமிழ்ச் சுருக்கெழுத்து படிப்பது நான் ஒருவன் மட்டுந்தான். அதனால் அந்தப் பயிற்சி நிலையத்தில் நான் தனித்துவமானவனாக அடையாளப் படுத்தப்பட்டேன்.

அங்கே கூடல்மணியன் என்கிற பாவலரும் என்னைப் போல தனித்துவமாக பார்க்கப்பட்டவர். நான் தமிழ்ப்பற்றால் தனித்துவமாக அறியப்பட்டவன் என்றால், கூடல்மணியன் தன் புதுக்கவிதையால் தனித்துவமாக அறியப்பட்டார். 

நான் மரபுக்கவிதையில் ஈடுபாடு உள்ளவன் என்கிற காரணம் பற்றியும், கவிதை, கவிஞர் என்பவைகளையும்- பா, பாவலர் என்றே முன்னெடுக்கிறவன் என்கிற காரணம் பற்றியும், அவரோடு எனக்குப் பெரிதாக ஈடுபாடு எழவில்லை. ஆனாலும் அவர் என்னோடு தொடர்பு கொள்ள பலமுறை முயன்றிருந்தார். காரணம் அவர் கருமலைக்கூடல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலாளர். என்னை அந்த அமைப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அவரை என்னைத் தொடர வைத்தது.

அவரின் அமைப்பால் மேட்டூர் அணை, தங்கமாபுரிப்பட்டணம் வஉசி நகர் மக்கள் மனமகிழ் மன்றத்தில் உள்ளரங்க இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த இலக்கிய நிகழ்ச்சியில், நூறு பூக்கள் மலரட்டும் என்கிற தலைப்பில் பாட்டரங்கமும் முன்னெடுக்கப்பட்டது. அதில் நானும் கலந்து கொள்ளும் வகைக்கு என் இலக்கிய நண்பர் பாவலர்.தமிழ்த்தென்றல் எனது பெயரையும் பதிவு செய்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நான், பாவலர்.தமிழ்த்தென்றல், கவிஞர்.கூடல்மணியன் மூவரும் இணைந்து நாங்கள் அடிக்கடி பயன்படுத்தும் உள்நாட்டு அஞ்சல் உறையைத் தமிழ்ப்படுத்தி இரண்டாயிரம் படிகள் அச்சிட்டு நண்பர்களுக்கெல்லாம் வழங்கிய ஒரு தமிழ்ப்பணியை முன்னெடுத்தோம்.

இனி சுருக்கெழுத்துக்கு வருவோம். தமிழ் சுருக்கெழுத்து படிப்பதற்கான நூல், நெடிய முனைப்பாற்றலைத் தொடர்ந்தே எனக்குக் கிடைத்தது. அன்றைக்கு நடைமுறையில் இருந்த, எனக்குக் கிடைத்த, சீனிவாசராவின் அந்தத் தமிழ்ச் சுருக்கெழுத்து முறை ஆங்கில அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த நூல் மூலம் தமிழ்ப்புலமை பெறுவது சாத்தியமில்லை என்று எனக்குத் தோன்றியது.

பிட்மெனின் ஆங்கில சுருக்கெழுத்து முறை எனக்கு வியப்பை அளித்தது. காரணம் அது- இயல்பாக தமிழ் கொண்டுள்ள ஒலியன் எழுத்து முறை மாதிரி, எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. 

எடுத்துக்காட்டிற்கு டிஎஎம்ஐஎல் என்று எழுதப்படுகிற டமில் 'ட் அ ம் அ ல்' என்று எழுதப்பட்டது. ஆங்கில சுருக்கெழுத்தில் ஏபீசிடி என்று எழுத்துக்கள் அமைக்கப்படவில்லை. க் ச் ட் த் என்றே அமைக்கப்பட்டிருந்தது.

சர் ஐசக் பிட்மன் என்னும் ஆங்கில எழுத்தாளர் 1837ஆம் ஆண்டில் தற்போது பழக்கத்தில் உள்ள புதிய வகைச் சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார். இதை சுருக்கெழுத்து முறை என்பதை விட ஒலியன் எழுத்துமுறை என்றே சொல்லலாம். 

ஆகா! தமிழ் இயல்பிலேயே ஒலியன் எழுத்து முறையைக் கொண்டதால் தமிழ் எழுத்துமுறை இயல்பிலேயே சுருக்கெழுத்து முறை அல்லவா என்று எனக்குள் கேட்டு என்னோடு தொடர்பில் இருந்த இலக்கிய நண்பர்களுக்கெல்லாம் அந்தச் செய்தியைப் பகிர்ந்து மகிழ்ந்தேன்.

இன்று சன் தொலைக்காட்சியில் மேட்டூர் பகுதிக்கு செய்தியாளராக இருக்கிற கு.இராசசேகரன் என்னிடம் தமிழ்ச் சுருக்கெழுத்து கற்றுத்தருமாறு தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். நான், என்னிடம் உள்ள சீனிவாசராவின் தமிழ்ச் சுருக்கெழுத்து முறை நூலை அவருக்குக் கொடுத்து நீங்களே படித்துக் கொள்ளுங்கள் என்று விட்டிருக்கலாம். ஆனால் ஆங்கில அடிப்படையில் அமைந்த அந்தச் சுருக்கெழுத்து நூலை பரப்புதல் செய்ய எனக்கு விருப்பம் எழவில்லை. 

நானாக தமிழ்அடிப்படையில் ஒரு சுருக்கெழுத்து முறையை ஒவ்வொரு படியாக உருவாக்கி, அதற்கு அவரைப் பயிற்றுவித்து வந்தேன். ஒரு எல்லையில்தான் சொன்னேன், அவர் கற்றுக்கொண்ட சுருக்கெழுத்து முறை நான் உருவாக்கியது என்று. அவர் வியந்து பாரட்டியதோடு பல்வேறுபட்ட இதழ்களில் பணியாற்றிய செய்தியாளர்களை எனக்கு மாணவர்கள் ஆக்கினார். 

நான் உருவாக்கிய தமிழ் அடிப்படையிலான சுருக்கெழுத்துமுறையை புத்தகமாக்கவோ, உரிய அங்கீகாரம் பெறவோ, நான் தொடர்ந்து முயல எனக்கு போதிய காலமோ, பொருளாதாரமோ, தொழில்நுட்பமே கைவரவில்லை.

இன்றுவரை வேறுயாரும் கூட தமிழ்அடிப்படையில் சுருக்கெழுத்தை உருவாக்க முயலாத காரணம் பற்றி தமிழ்நாடு அரசே சீனிவாசராவ் முறையைத்தான் தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது.

சுருக்கெழுத்தாளர்களுக்கான பயிற்சி நிலையங்கள் பேரளவாக இல்லை என்றாலும், சுருக்கெழுத்தாளர்களுக்கான  வேலைவாய்ப்பை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக வழங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.  

சுருக்கெழுத்தில் 5 நிலைகள் உள்ளன. தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வுகள் நடத்தில் சான்றிதழ்களை வழங்குகின்றன. அறங்கூற்றுமன்றங்களில் சுருக்கெழுத்துப் பணி, பேரறிமுக நிறுவனங்களில் அதன் தலைமை அதிகாரிக்கு குறிப்பெடுக்கும் பணி,  மிகப் பெரிய வழக்கறிஞர்கள் தனக்கென்று ஒரு சுருக்கெழுத்தாளரைப் பணியில் வைத்திருப்பார்கள். அறங்கூற்றுவர்கள் தீர்ப்புகளை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ சொல்வதை சுருக்கெழுத்தில் எழுதி தட்டச்சு செய்வார்கள். பெரிய அதிகாரிகள் தான் பேச வேண்டிய கூட்டத்தில் பேசவேண்டியதை கூற சுருக்கெழுத்தாளர்கள் எழுதி தட்டச்சு செய்து கொடுப்பார்கள். 

சுருக்கெழுத்து தேர்வு எழுத குறைந்தது 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 9ஆம் வகுப்பு படிக்கும் போதே சுருக்கெழுத்து பயில ஆர்வம் உள்ள மாணவர்கள் வந்துவிடுகிறார்கள். இதனை படிக்க அகவை என்பது தடை கிடையாது. சுருக்கெழுத்து ஆங்கிலம் படிக்க பிட்மேன் முறையும் தமிழுக்கு சீனிவாசராவ் முறை மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்ச்சுருக்கெழுத்து மட்டும் தனியாகக் கற்றவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தோடு தமிழ்ச் சுருக்கெழுத்தும் கற்றிருப்பது கூடுதல் தகுதியாகப் பார்க்கப்படுவதாக அறிய முடிகிறது.

உங்களில் யாராவது, தமிழ்அடிப்படையில் ஒரு சுருக்கெழுத்து முறையை உருவாக்க ஆர்வம் கொண்டெழும் முயற்சிக்கு இந்தக் கட்டுரையை நான் காணிக்கை ஆக்குகிறேன்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,616. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.