Show all

நீங்கள் ஏன் வாழ்கிறீர்கள் என்று சிறப்பாக சொல்ல முடியுமா?

நீங்கள் ஏன் வாழ்கிறீர்கள் என்று சிறப்பாக சொல்ல முடியுமா? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

15,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: வாழ்க்கையின் நோக்கம் வளர்தல் மட்டுமே. காலக்கெடு முடியும் வரை வளர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையின் நோக்கம். அதனால், நான் வாழ்கிறேன் என்று சொன்னால் வளர்கிறேன் என்றே பொருள்

முதலெனப்படுவது இடமும் காலமும் என்கிறது தமிழியல். உலக இயல்களில், மதங்கள்- தெய்வத்தில் தொடங்குவதாகத் தெரிவிக்கிறது. இயல்அறிவு- (சயின்ஸ்) பேரண்டத்தில் தொடங்குவதாகத் தெரிவிக்கிறது. அதற்குத் தகுந்தாற்போல் அவை இரண்டும் வாழ்க்கை நோக்கத்தை ஆன்மீகம் என்ற தலைப்பிலும், இயல்அறிவு என்ற தலைப்பிலும் ஆய்கின்றன. 

அவைகள் இரண்டும் வாழ்வதன் நோக்கத்தை நெடுங்கட்டுரையாக விரித்துக் கொண்டே போகுமே அன்றி தமிழியல் போல வாழ்க்கையின் நோக்கம் வளர்தல் மட்டுமே என்று அறுதியிட்டுக் கூறாது.

முதலெனப்படுவது இடமும் காலமும் என்று தெரிவித்த தமிழியல் பேரண்டப் பெருவெடியை இறுதி என்று தெரிவிக்கிறது. 
பேரண்டப் பெருவெடியை முதலென பேசுகிறது இயல்அறிவு. பேரண்டம் வெடித்து புவி, ஞாயிறு, என்பனவான கோள்கள் விண்மீன்கள் என்றெல்லாம் பிரிந்தன என்கிறது. ஒரு பெரிய பொருள் எத்தனைத் துண்டங்களாக உடைந்தாலும் அத்தனைத் துண்டுகளும் ஒரே இயல்பைக் கொண்டிருக்க முடியுமே அன்றி எப்படி வேறு வேறுபட்ட இயல்பு உடைய கோள்களும் விண் மீன்களும் வந்தன என்ற கேள்விக்கு கதை சொல்லுமே யன்றி தெளிவான காரணம் சொல்லாது.

ஆனால் தமிழியல் தெளிவான புரிதலை விடையாக்குகிறது. ஆம்! பேரண்டம் வெடித்து ஒரே இயல்புடைய கோடி கோடி கோடி என்றும் தொடரும் வகையான பேரெண்ணிக்கையில் தனி ஒன்றுகளாக சிதறின என்கிறது.

முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில் இடம் என்பது வெளி. தனி ஒன்றுகள் என்பன காலம் என்று பேசுகிறது தமிழியல். 

வெளி என்பது ஒன்றுதான். வெளிக்கு எல்லையும் இல்லை. தான்தோன்றி இயக்கமும் இல்லை. தனி ஒன்றுகளுக்கு பற்பல என்கிற எண்ணிக்கையும் உண்டு. எல்லையும் உண்டு. தான்தோன்றி இயக்கமும் உண்டு. 

மிக மிக நுட்பமான தனி ஒன்றுகள் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளுதல் என்கிற சுழல் இயக்கத்தால் வளர்தல் என்கிற பாடு தொடங்குகிறது.
அருகருகே வலம்புரியாக சுழன்று கொண்டிருக்கிற இரண்டு தனி ஒன்றுகளின் பொருந்து முகத்தில் அமைகிற இயக்கம் எதிர் இயக்கமாக அமைய இரண்டும் ஒன்றாகிறது. இதுதான் முதலாவது வளர்ச்சி. 

இதை, இரண்டு கயிறுகளை ஒரே திசையில் நன்றாக முறுக்கி இரண்டையும் பக்கம் பக்கமாக பிடித்தால் இரண்டும் ஒன்றாக முறுக்கிக்கொள்வதை வைத்து புரிந்து கொள்ளலாம். மிக மிகத் தடிமனான தேங்காய் நார் கயிறுகளை உருவாக்கிக் கொள்ள இந்த அடிப்படைதான் நமக்குப் பயன்படுகிறது.

அருகருகே வலம்புரியாக சுழன்று கொண்டிருக்கிற இரண்டு தனி ஒன்றுகளின் பொருந்து முகத்தில் அமைகிற இயக்கம் எதிர் இயக்கமாக அமையுமா? என்பதை வட்டமான இரண்டு கடிகாரங்களை பக்கம் பக்கமாக வைத்து அதன் முள் இயக்கத்தைப் பார்த்து புரிந்து கொள்ள முடியும்.

இடது கைப்பக்கம் வைத்த கடிகரத்தின் மூன்று என்கிற எண்ணும் வலது கைப்பக்கம் வைத்த கடிகாரத்தின் ஒன்பது என்கிற எண்ணும் பொருந்து முகத்தில் அமையும் அல்லவா?

இடது கைப்பக்கக் கடிகாரத்தில் மூன்றில் இருந்து நான்குக்கு கடிகார முள் பயணிக்கும் போது கீழ்நோக்கிய இயக்கம் கொண்டிருக்கும் அல்லவா! 

ஆனால் வலது கைப்பக்கம் கடிகாரத்தில் ஒன்பதில் இருந்து பத்துக்கு கடிகார முள் பயணிக்கும் போது மேல் நோக்கிய இயக்கம் அமைவதைப் புரிந்து கொள்ளலாம். 

இப்படித் தனி ஒன்றுகள் இரண்டு நான்கு எட்டு பதினாறு என்று பல பல எண்ணிக்கையில் வளரும் போது அவைகளுக்குப் புதிய புதிய இயல்புகள் கிடைக்கின்றன என்று தெளிவு படுத்திகிறது தமிழியல். 

எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு அடிப்படை என்கிற ஒரு இயங்கியல் விதி நமக்கு இங்கே கிடைக்கிறது.

எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு அடிப்படை என்பதை தெளிவாக நிறுவுகிறது இயல்அறிவும் தனிமப்பட்டியலில். 

அதாவது ஒரு நேர் (எலக்ட்ரான்) ஒரு நிரை (புரட்டான்) இருந்தால் அது நீர்வளி (ஹைட்ரஜன்) என்கிற தனிமம். 79 நேரும் 79 நிரையும் இருந்தால் அது தங்கம் என்கிற தனிமம் என்று தெரிவித்து எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு அடிப்படை என்று ஒப்புக் கொள்கிறது இயல்அறிவு.

ஆக வளர்தல் என்பதில்தான் இயற்கையின் அனைத்து மாற்றங்களும் சாத்தியம் ஆகின்றன என்று தெளிவாக நிறுவுகிறது தமிழியல்.

தந்தையின்- இனப்பெருக்க வளர்தல் நோக்கம் முன்னெடுத்த அரைசெல், தாயின்- இனப்பெருக்க வளர்தல் நோக்கம் முன்னெடுத்த அரை செல்லோடு தாயின் கருப்பையில் இணைந்து ஒரு முழு செல் உருவாகிறது. அந்த முழுசெல் தாயின் குருதி மூலமாக உணவு பெற்று இரண்டு நான்கு எனப்பல்கி திசுக்களாகி, உறுப்புக்கள் ஆகி, மண்டலங்கள் ஆகி முழுக் குழந்தையாக வளர்கிறது.

எறத்தாழ இருநூற்று எண்பது நாட்களில் குழந்தை பிறக்கிறது. பிறந்த குழந்தைக்கு தன் குருதியை பாலாக்கி தாய் உணவு தருவதால் குழந்தை உடலால் வளர்கிறது. தாய் தன்மூச்சுக்காற்றால் ஓசையை உருவாக்கி மொழி தருவதால் அந்தக் குழந்தை அறிவால் வளர்கிறது. 

நாம் ஒவ்வொருவரும் உடலாலும், அறிவாலும், உடை இருப்பிடம் என்று பொருட்களாலும் நம் காலக்கெடு முடியும் வரை வளர்ந்து கொண்டே இருக்கிறோம். நாம் வளர்வதோடு குழந்தைகள் பெற்றுக் கொண்டு நமது இனவளர்ச்சியையும் முன்னெடுக்கிறோம். 

நாம் வேகவேகமாக வளர்வதால் நம் எண்ணிக்கைக்கு இயல்பான காலக்கெடு குறைந்து போகிறது. ஆக நமது வளர்ச்சி இயல்பாகவும் உறுதியாகவும் இருந்தால் நம்மால், நமக்கான எண்ணிக்கை இயல்புக்கான கால அளவிற்கு வாழ்க்கையை நீட்டிக்க முடியும். நாம் நூற்று இருபது ஆண்டுகள் வரை வாழமுடியும் என்று சில தமிழியல் தரவுகள் மூலம் அறிய முடிகிறது. 

பழந்தமிழகத்தில் நூற்றிருபது ஆண்டுகள் வாழ்ந்த பெருமக்கள் இருந்திருக்கின்றனர். இன்றைக்கு உலகத்தோடு, ஏற்றதாழ்வு சட்ட சமூகத்தில், தமிழ்மக்கள் கலந்து வாழ்வதால் பணமீட்டும் முயற்சியே பேரளவான மனஉளைச்சலைத் தந்து நம் வாழ்க்கை காலம் குறைந்து போவதற்கு காரணியாக அமைகிறது. 

தமிழ்ச் சமூகத்திற்கு, அயல் சார்புகள் இல்லாத, வாழ்க்கை முறையும் மண்ணும் கிடைக்குமானால் தமிழ்ப் பெருமக்களால் அதை நிறைவேற்றிக் காட்ட முடியும். எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணி நேர ஓய்வு, எட்டுமணி நேர தூக்கம் என்று பழந்தமிழர் வாழ்க்கை முறையை இன்றைக்கும் நம்மால் முன்னெடுக்க முடியுமானால் நம் வாழ்க்கைநாளை நாம் கூட்ட முடியும். 

குழந்தைகளின் மொழி கற்றல் திறனில் இருந்து மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரத்தை நிறுவிய தமிழ்முன்னோர், வளரும் குழந்தைகளின் நடை கற்றலில் இருந்து ஓக இருக்கையை நிறுவிய தமிழ்முன்னோர், ஆமைகளின் உயிர்வாழ்க்கையோடு போட்டி போட்ட காரணம் பற்றியே தமிழர்களுக்கு நீண்ட வாழ்க்கை முறை கிடைத்தது என்றறிய முடிகிறது.

போர்கலைபயிற்சியில் வாழ்க்கைக் காலம் குறைவதைக் கண்டறிந்த தமிழ்முன்னோர். அந்தக் குறைக்காலத்தை ஈடுசெய்ய ஓக இருக்கையைக் கண்டறிந்தனர். 

சாரணர் உடற்பயிற்சியில் கைகளைப் பக்கவாட்டில் நீட்டி, தலைக்கு மேலே உயர்த்தி, மீண்டும் பக்கவாட்டில் நீட்டி, நான்காவதாக இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து, ஒவ்வொரு பயிற்சியையும் 1 2 3 4 4 3 2 1 என்று வேக வேகமாக செய்து முடிக்கிறோம். 

அந்த வேகப்பயிற்சி முறையை ஓக இருக்கை மறுக்கிறது. ஒவ்வொரு பயிற்சிக்கும் இருக்கை என்று பெயர் வைத்து சில மணித்துளிகள் அதே நிலையில் இருக்க வேண்டும் என்கிறது ஓக இருக்கை. நாம் சாரணர் உடற்பயிற்சியைக் கூட ஓக இருக்கை மாதிரி செய்தால் கூடுதல் காலவாழும்பலன் கிடைக்கும் 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,567.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.