Show all

ஒருவர் எவ்வளவு படித்திருந்தாலும், பண்பு இல்லாவிட்டால் என்ன ஆகும்? அறிவுக்கும் பண்புக்கும் உள்ள உறவு என்ன?

ஒருவர் எவ்வளவு படித்திருந்தாலும், பண்பு இல்லாவிட்டால் என்ன ஆகும்? அறிவுக்கும் பண்புக்கும் உள்ள உறவு என்ன? என்று என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு நான் உருவாக்கிய கட்டுரை இதுவாகும்.

29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5127: 

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

தன் முதல் உடைமையான தமிழைக் கொண்டாடுகிற பற்று, தன் பிள்ளைகளைப் பெற்றோரைக் கொண்டாடுகிற பாசம், தன் தலைவனைத் தலைவியைக் கொண்டாடுகிற காதல், தனக்கு இணக்கமானவர்களைக் கொண்டாடுகிற நட்பு, தன்னை முயக்கி இருக்கிற கடவுளை கொண்டாடுகிற அருள் என்று தன்னுடைய ஐந்து வகையான உடைமைகளைக் கொண்டாடுவதே அன்பு.  

அன்புடைமை என்பது உடைமைகளைக் கொண்டாடுகிறவனாக இருத்தல் என்பதாகும்.

ஆன்ற குடி பிறத்தல் என்பது அவன் அவனின் முந்தைய ஏழு தலைமுறைகளில் கிடைத்திருந்த பாடாற்றல்கள் அடிப்படையிலேயே இயங்குதல் என்பதாகும்.

ஆன்ற குடி பிறத்தல் என்பது பிறந்திருத்தல் என்கிற பிறப்படிப்படை ஏற்றதாழ்வு பேணுகிற நோக்கம் போல, பல ஆயிரம் ஆண்டுகளாக பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் என்கிற அயல்இயல்களிலேயே உலா வந்துவிட்ட காரணம் பற்றி பொருள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் அத்தனை உரையாசிரியர்களும்.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
என்பது மற்றொரு குறள்.

அன்புடைமையும் ஆன்ற குடிப்பிறத்தலுமே உண்மை அறிவும் ஆழ அறிவும் ஆகும்.

நடப்பில் இருக்கிற படிப்பு நுண்ணிய நூல் பல கற்றல் என்கிற அகல அறிவு ஆகும்.

அகல அறிவில் வகைப்பாட்டியல் என்கிற பண்பு ஒருபோதும் வளராது. பாகுபாட்டியல் என்கிற ஆதிக்க அடாவடித்தனமே வளரும். மற்றவர்களின் ஆதிக்க அடாவடிகளுக்கு எதிர்வினையாற்றும் முரண்பாட்டியலே வளரும்.

பேரளவான தனிமனிதர்களில் வகைப்பாட்டியலைக் காணமுடியும். குடும்பத்தில் அம்மா வகைப்பாட்டியலுக்குச் சொந்தக்காரி ஆவாள்.
இன அடிப்படையில் தமிழினம் மட்டுமே வகைப்பாட்டியல் பேணும் வகைமைக்கானதாக தொடர்கிறது.

பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலக மதங்கள் ஆகியவைகள் பாகுபாட்டியல் பேணுகிறவைகளாகத் தொடர்கின்றன.

உலக அளவில் மார்க்சியமும், இந்திய அளவில் திராவிடம் என்கிற தலைப்பும் முரண்பாட்டியல் பேணுகிறவைகளாகத் தொடர்கின்றன.

தமிழ்நாட்டின் நடப்பு கல்விமுறையும் முழுக்க முழுக்க நிருவாகத்தள வேலைவாய்ப்புக்கான கல்வியாகவே பேணப்பட்டு வருகிறது.

வேலைதருகிற நிறுவனங்கள் பாகுபாட்டியில் பேணுகிற அமைப்புகளிடமே முழுக்க முற்றாக இருக்கிறது.

பண்புக்கும் படிப்புக்கும் எல்லையற்ற இடைவெளியே நடப்பில் பேணப்பட்டு வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,404.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.