Show all

விளக்குகிறார் திருச்சி வேலுச்சாமி! இங்கிலாந்தைத் தொடர்ந்து இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை விலக்குவது சாத்தியமே

இங்கிலாந்தைத் தொடர்ந்து இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை விலக்குவது சாத்தியமே என்று விளக்குகிறார்: காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் இராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தமாக ஜெயின் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தவருமான திருச்சி வேலுச்சாமி

07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி- தமிழீழப் பகுதிகளில், காவல்துறை, வங்கி என்று தனியாட்சி நடத்திவந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு- இங்கிலாந்து அரசு கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது.

இதையடுத்து, இந்தியாவில், விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை விலக்குவது சாத்தியம்தானா என்ற கேள்விக்கு பதில் கேட்டு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தமாக ஜெயின் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தவருமான திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளதாவது: 

இராஜீவ் காந்தி படுகொலை வழக்கைத் தொடர்ந்துதான் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் தடை விதித்தன.

விடுதலைப் புலிகளின் வழிமுறைகள் வேறாக இருந்தாலும், அவர்களின் போராட்டம் என்பது, சுதந்திரத்துக்கான போராட்டம்தான். உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்களுக்கு இந்தியா உதவியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, தென்னாப்பிரிக்காவில் இனவெறி தலைவிரித்தாடியபோது, அன்றைக்கு இந்தியத் தலைமைஅமைச்சராக இருந்த ஜவஹர்லால் நேரு, தென்னாப்பிரிக்காவின் இனவெறியை எதிர்த்து, அந்த நாட்டோடு இந்தியாவுக்கு இருந்த உறவையே துண்டித்துக்கொண்டார்.

இலங்கையில் சிங்களம் - தமிழ் என்ற இன வாதத்தின் அடிப்படையில் நடைபெற்ற போராட்டத்திலும் தமிழ்ப் போராளி அமைப்புகளுக்கு இந்தியா பெருமளவில் உதவி செய்துவந்திருக்கிறது. ஆனால், இராஜீவ் காந்தி கொலை வழக்குக்குப் பிறகு இந்த நிலைமை அப்படியே மாறிப்போனது. இராஜீவ் கொலையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் என்பது குறித்து நான் தெரிவித்த கருத்துகளை ஜெயின் ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் பல்முனை நோக்கு புலனாய்வு மூலமாக இன்றளவிலும் விசாரணை நடைபெற்றுவருவதாக இந்தியத் தரப்பிலும் சொல்லப்படுகிறது.

20 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்துவதோ அல்லது இதுவரை விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல்கள் குறித்து கேட்டறிந்தாலோ போதும். இங்கிலாந்து இப்போது எடுத்திருக்கும் முடிவைத்தான் இந்தியாவும் எடுக்க வேண்டி வரும் என்பது என்னுடைய தனிப்பட்ட, அழுத்தமான எண்ணம். 
இந்தியா, ஜனநாயகத்தை நேசிக்கக்கூடிய நாடு. இன்றைக்கு ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க., ஹிந்து மதப் பாதுகாவலன் என்று சொல்லித்தான் பொறுப்புக்கு வந்திருக்கிறது. இலங்கையில் நடைபெற்றது இனவாதம் என்றாலும்கூட, அங்கே கொல்லப்பட்டவர்கள் அனைவருமே ஹிந்துக்கள். கொன்று குவித்தவர்கள் பௌத்தர்கள். இந்தச் சூழலில், மற்ற கட்சிகளுக்கோ இந்த பாட்டில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசியல் காரணங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், பாஜகவுக்கு அரசியல் காரணத்தைத் தாண்டி, அவர்கள் சொல்லிவரும் ‘ஹிந்து மதப் பாதுகாவலன்’ என்ற காரணமும் அடங்கியிருக்கிறது. இப்போதும் இலங்கையிலே ஹிந்துக் கோயில்கள் இடிக்கப்படுவதும், புத்த விஹார்கள் கட்டப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

பாஜக இதுநாள் வரையிலும் சொல்லிவருவது உண்மையென்றால், அந்த உண்மையை உலகறியச் செய்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். எனவே, உடனடியாக ஒன்றிய பாஜக அரசு, பல்முனை நோக்கு புலனாய்வுக்குழுவின் விசாரணை முடிவுகளைப் பெற்று, அதன்பேரில் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்து, இங்கிலாந்து காட்டும் வழியில் இந்தியாவை பயணப்படவைக்க வேண்டியது அதன் கடமை! என்கிறார் அழுத்தமாக.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.