Show all

சொல்லிக் கொள்ளாமல் ஓடியிருக்கிறதா கொரோனா! சென்னையில் 3-ல் ஒருவருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது

சென்னை மாநகரில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதாக செரோ ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை மாநகரில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதாக செரோ ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. செரோ ஆய்வு என்பது குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களின் ரத்த மாதிரிகளை சோதனைக்குட்படுத்தி அதில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் உருவாகி உள்ளதா என்பதை ஆராய்வதாகும். 

கொரோனா சமூகப் பரவலாக மாறிவிட்டதா என்பதை உறுதி செய்ய இத்தகைய செரோ ஆய்வுகள் சென்னையில் நடத்தப்பட்டன. அண்மையில் நடத்தப்பட்ட செரோ ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் சென்னையில் 21.5 விழுக்காட்டு பேர்களுக்கு அதாவது சோதனையில் பங்கேற்ற 5 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்திருக்கலாம் என தெரியவந்தது. 

இதேபோல் சென்னை மாநகராட்சி மீண்டும் செரோ ஆய்வு ஒன்றை நடத்தியது. மொத்தம் 6,389 பேரிடம் செரோ ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2,062 பேர் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் உருவாகி இருப்பது தெரியவந்தது. 

இதன் மூலம் சென்னையில் 32.3விழுக்காட்டு பேர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. அதாவது சென்னையில் 3-ல் ஒருவருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது தெரியவந்துள்ளது. 

சென்னையில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,000க்கும் கீழே இருந்து வருகிறது. சென்னையில் மொத்தம் 1,93,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் 3,566 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தற்போதைய நிலையில் 11,110 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.