Show all

மிரட்டல் எல்லாம் வேண்டாம் என்று கீச்சுப் பதிவிட்டுள்ளார் கிரேட்டா தன்பெர்க்! டெல்லி உழவர்கள் போராட்டத்துக்கு- தன் ஆதரவுக்கு

டெல்லியில் போராடும் உழவர்களுக்குத் தனது ஆதரவு தொடரும் என்று சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் மீண்டும் கீச்சுப் பதிவிட்டுள்ளார்.

22,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் உழவர்களுக்கு தனது ஆதரவு தொடரும் என்று சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் மீண்டும் கீச்சுப் பதிவிட்டுள்ளார்.

ஒன்றிய பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் வட இந்திய உழவர்கள் மாதக்கணக்காகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பல்வேறு கெடுபிடிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனை மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் உழவர்களின் போராட்டத்துக்கு அமெரிக்க பாப் பாடகி ரிகானா, பருவநிலை மாற்றம் தொடர்பான சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் உழவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக கீச்சுவில் பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.

இதற்கு ஒன்றிய பாஜக அரசும் ஒன்றிய அரசின் அமைச்சர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட சிலர் இதை இந்தியாவின் உட்பாட்டு தலையீடு என்று கருத்தும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கிரேட்டா தன்பெர்க் இன்று மாலை மீண்டும் ஒரு கீச்சுவை பதிவிட்டுள்ளார். 

அதில், உழவர்களின் அமைதிவழி போராட்டத்தை இப்போதும் ஆதரிக்கிறேன். வெறுப்பு விமர்சனம், மிரட்டல்கள், மனித உரிமை மீறல்கள் எதுவும் மாற்றிவிடாது என கீச்சுவில் கூறியுள்ளார் கிரேட்டா தன்பெர்க்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.