இரும்புப் பலகைகளில் கூரான ஆணிகளை நேர் செங்குத்தாகப் பற்றவைப்பு செய்து, அந்தப் பலகைகளை நடுச்சாலைகளில் பொருத்தி வைத்து, நமக்கு உண்டி கொடுத்து உயிர்காக்கும் உழவர்களிடமிருந்து, எல்லையைக் காத்திருக்கின்றனர் டெல்லி காவல்துறையினர். 22,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இரும்புப் பலகைகளில் கூரான ஆணிகளை நேர் செங்குத்தாகப் பற்றவைப்பு செய்து, அந்தப் பலகைகளை நடுச்சாலைகளில் பொருத்தி வைத்து எல்லையைக் காத்திருக்கின்றனர் டெல்லி காவல்துறையினர். இது அத்துமீறி எல்லை கடக்க முயலும் அன்னியர்களுக்காக முன்னெடுத்த நடவடிக்கை அல்ல. இது நமக்கு உண்டி கொடுத்து உயிர்காக்கும் வேளாண் பணியில் ஈடுபட்டிருக்கும் உள்நாட்டு உழவர் பெருமக்களுக்கு. இதனால், உழவர்கள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் பொருட்டு டெல்லி காவல்துறை தடுப்பு வேலிகள் அமைத்திருக்கிறது. அதிலும் நடுச்சாலையில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுவும் அண்டை நாடுகளிடம் இருந்து இந்தியாவைக் காக்க எப்படி வேலிகள் போடப்படுமோ, அதுபோல, டெல்லியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த ஆணிபொருத்திய இரும்புப் பலகை வேலிகள் போடப்பட்டுள்ளன. போராடும் உழவர்கள் யாரும் அந்தப் பக்கம் வண்டியை எடுத்து கொண்டு வந்துவிடக்கூடாதாம். அப்படியே வந்தாலும் அந்த வண்டி பஞ்சர் ஆகிவிட வேண்டும் என்பதாக இப்படி ஆணிகளைப் போட்டு வைத்திருந்தனர். டெல்லி காவல்துறையை ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் விமர்சிக்க ஆரம்பித்தனர். உழவர்கள் உங்களுக்காக வயலில் கால் பதித்து சோறு கொடுக்கிறார்கள். நீங்கள் அவர்களின் கால்களில் ஆணியைப் பதித்து அவர்களைப் புண்ணாக்கப் போகிறீர்களா? என்ற விமர்சனங்கள் எழுந்தன. டெல்லி காவல்துறையினர் முன்னெடுத்த இந்த எல்லைக்காப்பு அட்டூழியம் தற்போது பன்னாட்டு பேசுபொருளாகி இணையம் தீயாகி வருகிறது. பாடகி ரிகன்னா, சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் இந்தப்பாட்டை பேசுபொருளாக்க காரணமாகிவிட்டது. இந்நிலையில், போராடி வரும் உழவர்களைச் சந்திக்க காசிப்பூர் சென்ற தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் முயன்றனர். கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன், ரவிக்குமார், சு.வெங்கடேசன் போன்றோர், உழவர்களைச் சந்திக்க பேருந்தில் சென்றனர். காசிப்பூரில் தெருவெங்கும், தடுப்பு வேலிகள், ஆணிகள் போடப்பட்டுள்ளதால் அங்கே கொஞ்ச தூரத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு, நடந்தே சென்றுள்ளனர். ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திவிட்டனர். இந்த நிலையில் டெல்லி காவல்துறையினரின் இக்கொடுஞ்செயல் உலகளாவி பேசுபொருளாகி விட்ட நிலையில், இப்போது காவல்துறையினர் ஆணிபதித்த இரும்பு பலகைகளை அவசர அவசரமாக பிடுங்கி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அண்மைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான வேளாண் சட்டங்களுக்கு எதிராக வடஇந்திய உழவர்களின் போராட்டம் மாதக்கணக்கில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. உழவர்களின் இந்தப் போராட்டத்திற்குப் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உழவர்கள் போராட்டத்தை ஆதரிக்கும் எதிர்க்கட்சியினர் குடியரசுத் தலைவரின் உரையையும் புறக்கணித்தனர். அளவுக்கு அதிகமான குளிர், கொட்டி தீர்க்கும் பனியில் உழவர்கள் போராட்டத்தை உறுதியுடன் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் பெரும்பாலும் அகவை முதிர்ந்த தாத்தாக்கள்தான் இரும்பு மனசுடன் டெல்லி நுழைவாயிலில் மிரட்டலாக போராட்டத்தில் உட்கார்ந்துள்ளனர். டெல்லியின் காசிப்பூர், திக்ரி, சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் குவிந்துள்ளனர்.
அதாவது ஒரு சின்ன சந்து கிடைத்தால் கூட, உழவர்கள் உள்ளே நுழைந்துவிடுவார்களாம். கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி காத்துக் கொண்டிருக்கிறது டெல்லியை டெல்லிக் காவல்துறை. இந்த ஆணி பதித்த வேலை பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



