அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு 45 ஆயிரத்து 318 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 8 லட்சத்து 18 ஆயிரத்து 744 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 82 ஆயிரத்து 923 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். குணமளிப்புக்கு பாதியளவில் மரணம் ஏன்? குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின். 10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா நுண்ணுயிரி சீனாவின் உகான் நகரில் தோன்றி மற்ற நாடுகளுக்கு பரவி உள்ளது. கொரோனா நுண்ணுயிரித் தோற்றம் இயற்கையானதா? அல்லது கொரோனா நுண்ணுயிரி, செயற்கையாக ஆய்வில் கிடைத்து, மனிதத் தவறால் இத்துனை பாதிப்புகளை முன்னெடுத்து வருகிறதா என்ற கேள்வி ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்த வரை குணப்படுத்தல் விழுக்காட்டில், சரிபாதியைத் தாண்டி இறப்பு விழுக்காடு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இது அமெரிக்கா கொரோனா சிகிச்சைக்கு மேற்கொள்ளும் நடவடிக்கை சரியான பாதைக்கு வந்து சேரவில்லை என்பதாகத் தெரிய வருகிறது. கொரோனா பாதிப்புக்கான சிகிச்சையில் அமெரிக்கா பயன்படுத்தி வரும் மலேரியாவுக்கு எதிரான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளின் பாதுகாப்புத் தன்மையை ஆய்வாளர்கள் பலரும் கேள்விக்குட்படுத்தி எச்சரித்து வரும் நிலையில் அதிபர் டிரம்ப் உள்பட பலரும் இதுதான் தீர்வு என்ற அடிப்படையில் செயல்பட அது தற்போது பின்னடைவை சந்தித்துள்ளதாக அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது கொரோனா நோயாளிகள் சிலர் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளினால் மரணமடைந்துள்ளதாக தற்போது அமெரிக்காவிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. டிரம்ப் நிர்வாகம் 3கோடி முறைப்பாட்டுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை இருப்பு வைத்துள்ளது, இதில் பெருமளவு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை. தன்னுடைய சொந்த நலன்களுக்காக அதிபர் டிரம்ப் எந்த ஒரு விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பரிந்துரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது, ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் மரணங்கள் குறித்து டிரம்ப் கூறும் போது எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியவில்லை, சில நல்ல அறிக்கைகளும் உள்ளன, ஆனால் இது நல்ல அறிக்கை அல்ல, இது தொடர்பாக நாம் ஒருகட்டத்தில் முடிவெடுப்போம் என கூறி உள்ளார். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹெல்த் நிதி அளிக்கப்பட்டு நடத்திய ஆய்வில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மூலம்தான் மரண விகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதன் அறிக்கையில், கொரோனா சிகிச்சைக்கான மாதிரிகள் தற்போது ஆய்வுகளில் உள்ளன, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அல்லது குளோரோகுயின் கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது பற்றி மருத்துவ புள்ளி விவரங்கள் இல்லை. குளோரோகுயின் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுயின் அளித்தால் நோயாளியை மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து மோசமான விளைவுகள் பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும்’ என்று எச்சரித்துள்ளது. இதனையடுத்து நலங்குத் நிபுணர்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் ஆகியவற்றை சேர்த்து கொடுப்பதை கண்டிக்கின்றனர். ஏனெனில் இதனால் நச்சுத்தன்மை அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ளனர். ஆனால் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கழக ஆணையர் ஸ்டீபன் எம்.ஹான் , இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் பாஸ்க்ரெல் கூறும் போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாடு குறித்த ஆய்வறிக்கை டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தின் மீதான வெடிகுண்டு தாக்குதலாகும், இயல்அறிவை (சயின்ஸ்) விட அரசியலுக்கு முதன்மைத்துவம் கொடுத்ததன் விளைவை சந்திக்கிறோம் என்கிறார். ஆதாரமில்லாமல் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை டிரம்ப் பரிந்துரைத்தது பொறுப்பற்ற செயல், நான் ஏற்கெனவே அமெரிக்க உணவு மருந்துக் கழகத்தை எச்சரித்துள்ளேன், டிரம்பின் அரசியல் நெருக்கடிகளுக்கு அடிபணிய வேண்டாம் என்றும். இயல்அறிவை நம்பாமல் அரசியலை நம்பினால் நாம் இன்னமும் தேவையற்ற மரணங்களை சந்திக்க வேண்டியதுதான், வரலாறு நம்மை மன்னிக்காது என்று மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு 45 ஆயிரத்து 318 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 8 லட்சத்து 18 ஆயிரத்து 744 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 82 ஆயிரத்து 923 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



