கொரோனாவை முற்றாக ஒழிப்பதற்கும், ஒழித்த பின்னும் சமூகத்தில் நலமும் வளமும் தொடர்வதற்கும் கட்டாயத் தேவைகளாக முன்னெடுக்க வேண்டியவைகள்:- எல்லையில்லாமல் பாதுகாப்புக் கருவிகள், நாட்டின் அனைவருக்கும் பரிசோதனைகள், மருந்துகள், தடுப்பு மருந்துகள், ஏராளமான மருத்துவப் பணியாளர்கள், அரசு அதிகாரிகளின் விரைவான நடவடிக்கைகள், ஆட்சியாளர்களின் சமூக அக்கறை, முதலாவதாக ஊரடங்கு காலத்திற்கு மக்களின் சராசரி சம்பளத்தை அரசு அனைவர் வங்கிக் கணக்கிலும் போட்டு விட்டு தற்காலிகமாக ஊரடங்கை முன்னெடுக்கச் செய்தல் என்பனவைகளாகும். 10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரித் தொற்று சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி, தொடர்ந்து பல உயிர்ப்பலிகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இதில் தகுதியுள்ளவர்கள்தான் மருத்துவத் துறைக்கு வரவேண்டும் என்று நீட் தேர்வு வைத்த நடுவண் அரசு, பலமுறை வழக்கு தொடுத்தும் நீட் தேர்வு வைத்தே தான் தீரவேண்டும் என்று தொடர்ந்து தீர்ப்பு சொன்ன அறங்கூற்றுவர்கள், அறங்கூற்று மன்றங்கள், நீட் தேர்வுக்கு வினாத்தாள் தயார் செய்த அந்த புத்திக்கே டிப்போக்கள், நாங்கள் தேர்ச்சி வாங்கித் தருகிறோம் என்று இலட்சக்கணக்கில் பணம் கறந்த தனியார் பயிற்சி நிறுவனங்கள் எல்லாம் தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை தடுக்க தாங்கள் தகுதியுள்ளவர்கள் நெஞ்சை நிமிர்த்தவும் காணோம், தகுதியுள்ளவர்களை கண்டுபிடித்துத்தர முடியும் என்று அறைகூவல் விடுக்கவும் காணோம். மருத்துவ மாணவர்களுக்கு ஏதோ ஒரு தகுதியை எதிர்பார்த்து அந்தத் தகுதி இருப்பதாகப் பலரை மருத்துவக் கல்விக்குத் தேர்ந்தெடுக்க நீட் என்ற தேர்வுக்காக அனிதா போன்றவர்களைப் பலிகொடுத்தும் வாய்கிழிய வக்காலத்து வாங்கியும் வந்த இந்த வட்டாரங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன. நம்மை ஒருவர் தாக்க வரும்போது யார் தப்பி ஓடுவார்கள்? மனதளவில் நம்மால் எதிர்த்தாக்குதல் நடத்த முடியாது என்று கருதுகிற மிகமிகச் சிலர், அதுவும் அந்த ஊருக்குப் புதிதானவர்கள் தப்பி ஓடுவார்கள். சிலர் மறைவாக நின்று கொண்டு உறவுகளுக்கோ, நண்பர்களுக்கோ, எண் 100க்கோ பேசியில் அழைப்பார்கள். பெரும்பாலானவர்கள் திருப்பித் தாக்குவார்கள். நம்முடன் நமது தாயோ, தந்தையோ, அண்ணனனோ, தம்பியோ, அக்காவோ, தங்கையோ, நண்பனோ, அல்லது நமக்கு அறிமுகம் ஆன யாரோ ஒருவரோ இருப்பார்களேயானால் தாக்க வந்தவர் கதை அவ்வளவுதான். தாக்க வந்தவன் ஊரறிந்த முரடனாக இருந்தாலும், அப்போதைக்கு பின்வாங்கி விட்டு அப்புறம் உரிய நடவடிக்கையைத் தொடருவார்கள். இங்கே உலகறிந்த முரடனாக நம்மை தாக்க வந்திருப்பவன் கொரோனா. அவனுக்கு எதிராக தனிமனிதன் வீடடங்கி இருப்பது தற்காலிகமாக சரி. மேலே சொன்ன உறவுகள்- பெரியவர்களை, குழந்தைகளை, பெண்களை வீடடங்கி இருக்கச் சொல்வது சரி. ஆனால் சமுதாயம் வீடடங்கி இருக்கச் சொல்வது எப்படிச் சரியாகும். ஆனால் உலகம் முழுவதும்- சமுதாயங்களும், அரசும், நாடுகளும் இதையே (ஊரடங்கையே) வலியுறுத்துகின்றன. மேலோட்டமாக இது சரிபோலவே தோன்றும். ஆனால் உண்மையில் சரியல்ல. அதுவும் மக்கள் விலைகொடுப்பில் ஊரடங்கை முன்னெடுக்கும் அதிகாரப்பாட்டில் எந்தத் தருக்கமும் (இலாஜிக்) இல்லவேயில்லை. காவல்துறையினர் மட்டும் என்ன இழிந்த பிறவிகளா? அவர்கள் மட்டுமே மக்களை ஊரடங்கை முன்னெடுக்க வைப்பதற்காக தெருவில் அலைய வேண்டுமா? அரசு மருத்துவமனைகளும் அதன் பணியாளர்கள் மட்டுமே கொரோனாவிற்கு எதிராக முழுப்பொறுப்பெடுக்க வேண்டுமா? சரி மக்கள் வீடடங்கி இருக்கட்டும். அவர்கள் வீடடங்கி இருக்கும் நாட்களுக்கான சம்பளத்தை அரசுதானே தரவேண்டும். விபத்திற்கும், உயிரிழப்பிற்கும், நாம் காப்பீடு செய்து கொண்ட நிறுவனங்கள் எப்படி முழுப்பொறுப்போ, அப்படி இதுபோன்ற பேரிடர் காலங்களில் நாம் வரி செலுத்துகிற அரசுதானே முழுப்பொறுப்பு. 1.முதலாவதாக ஊரடங்கு காலத்திற்கு மக்களின் சராசரி சம்பளத்தை அரசு அனைவர் வங்கிக் கணக்கிலும் போட வேண்டும்.
2.உடனடியாக பாதுகாப்புக் கருவிகளை அரசு வாங்கிக் குவித்து மக்களுக்கு தாராளமாக வழங்க வேண்டும்.
3.நாட்டின் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனாவிற்கு தனிப்பிரிவு உடனடியாக ஒதுக்க வேண்டும்.
4.நாட்டின் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனைக் கருவிகளை உடனடியாக அமைக்க வேண்டும்.
5.கொரோனாவிற்கான மருந்துக்கள், தடுப்பூசிகள் கண்டுபிடிக்க தாராளமாக நிதி உதவியளித்து அனைத்து மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வித் துறையினரையும் முடுக்க வேண்டும்.
6.அனைத்து அரசுப் பணியாளர்களையும் பாதுகாப்புக் கருவிகளோடு கொரோனா தொற்று உள்ளவர்களைத் தேடித்தேடிக் கண்டுபிடிக்க களம் இறக்க வேண்டும்.
7.அரசு மக்களுக்கு சராசரி சம்பளத்தை வங்கிக் கணக்கில் போடுகிற கட்டாயத்துவம் மட்டுமே அரசை மேற்கண்ட பணிகளில் விரைவாக செயல்பட நெருக்கடி தரும்.
8.மக்கள் சராசரி சம்பளத்தை வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி சொத்தை விற்று, கடன் வாங்கி, பிச்சையெடுத்து, அடித்துப் பிடுங்கி, சமயத்தில் திருடி ஈடு செய்து கொள்வார்கள் என்றால், அரசுக்கு எந்த நிர்பந்தமும் இல்லாமல்- மக்கள் விலைகொடுப்பில் ஊரடங்கை நீட்டிப்பது என்றால் அது எல்லையில்லாமல் நீண்டுகொண்டேதான் போகும்.
9.நீட்டை வலியுறுத்துகிற அறங்கூற்று மன்றத்தில், பாமரக்குடும்பத்தில் பிறந்த யாராவது அறங்கூற்றுவர் இருந்தால்- ஊரடங்கை நீட்டிக்கும் காலத்திற்கு மக்களுக்கு சராசரி சம்பளத்தை வங்கிக் கணக்கில் போட்டுதான் ஆகவேண்டும் என்று தீர்ப்பு வரும். எதிர்பார்க்கலாம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



