31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் உயிரிழக்கும் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களைத் தகனம் செய்யும் வகையில் அரசாங்கத்தினால் சிறப்பு உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நலங்கு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. கட்டாயத் தேவை தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, துறைக்கு பொறுப்பான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கான அதிகாரங்களின் அடிப்படையில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, எவரேனும் ஒருவர் கொரோனா நுண்ணுயிரித் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பதற்கு நேரிட்டால், அவரது உடலை பெயர் குறித்து நியமிக்கப்படும் முறையான அதிகாரிகளால் தகனத்திற்கான கடமைகளை பெறுபேற்கும் நபர் தவிர்ந்த வேறு எவரிடமும் கையளித்தல் ஆகாது என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அத்தகைய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் முறையாக அங்கீகரிக்கப்படும் சுடலை அல்லது இடமொன்றில் உடல் தகனம் செய்யப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுண்ணுயிரி அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கத்திற்கென முழுமையாக எரிவதற்கென ஆகக் குறைந்தது நாற்பத்தைந்து நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை 800க்கும், 1200ற்கும் இடைப்பட்ட பாகை செல்சியஸ் வெப்ப நிலையில் உடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் அந்த நேரத்தில் பயன்படுத்தும் அனைத்து ஆடைகளும் மீள பயன்படுத்தப்படாத வண்ணம், உடலுடன் தகனம் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் சாம்பலானதும், உறவினர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க அவரது சாம்பல் உறவினர்களிடம் கையளிக்க முடியும் என உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உயிரிழக்கும் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களைத் தகனம் செய்யும் வகையில் அரசாங்கத்தினால் சிறப்பு உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



