ஜூம், மென்பொருளைத் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது 31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்து பணிபுரியும் பலரும் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் ஜூம். இந்த மென்பொருளைத் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது இந்த மென்பொருள் தற்போது உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில், கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்கள் யாரும் இந்த மென்பொருளைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. கடந்த கிழமை, கூகுள் நிறுவனம் இதுதொடர்பாக தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ஜூம் மென்பொருளில் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதால், ஊழியர்கள் மடிக்கணினிகளில் இந்த மென்பொருள் இருந்தால் அதன் சேவை இந்த கிழமையோடு நிறுத்தப்படும் என அறிவித்திருந்தது. கடந்த மாதம், மதர்போர்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில், ஐபேசி மற்றும் ஐபாட்களுக்கான ஜூம் செயலியிலிருந்து குறிப்பிட்ட சில தகவல்கள் முகநூல் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது. மேலும் இணையக் களவாணிகளின் ஊடுருவலுக்கும் இந்த மென்பொருள் வழிவிடுவதாக ஜூம் மென்பொருளின் பாதுகாப்பு தரம் குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டுவரும் நிலையில், கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்தச் செயலியை தங்கள் நிறுவன ஊழியர்கள் பயன்படுத்தக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா நுண்ணுயிரி பரவல் காரணமாக உலகம் முழுவதும தகவல்தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும் பெரும்பாலானார் வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழல் இன்று உருவாகியுள்ளது. அப்படி வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்கள் பலரும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் மற்றவர்களுடன் காணொளி கலந்துரையாடல் முறை மூலம் தொடர்புகொள்ள உபயோகிக்கும் ஒரு மென்பொருள்தான் ஜூம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



