Show all

கவலையில் கனடா! இதுவரை வரலாற்றில் இல்லாத தாக்குதல். 16பேர்களைப் பலிகொண்ட மர்ம நபரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு

கனடாவில் நிகழ்த்தப்பட்ட மர்ம நபரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. இதுவரை வரலாற்றில் இல்லாத இந்தத் தாக்குதல் ஏன் எதற்கு என்று புரியாத குழப்பத்தில் மக்களும், அரசும்.

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கனடாவும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். காவல்துறையினர் போல் உடையணிந்து கொண்டு வாகனம் ஒன்றில் சுற்றி திரிந்த அந்த நபர் பலரது வீடுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 16 பேர் பலியான சம்பவம் அந்த நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த நிகழ்வில் பெண் காவலர் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். நகரின் என்பீல்டு என்ற இடத்தில் அந்நபரை கண்டறிந்தனர்.

காவல்துறையினரின் விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் கேப்ரியல் வார்ட்மேன் (அகவை 51) என தெரிய வந்துள்ளது. அவரும் உயிரிழந்து விட்டார் என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு தீயும் வைத்துள்ளார். இந்தத் தாக்குதல் அந்த நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாதது. துப்பாக்கி சூடு நடத்தி தானும் மாண்ட அந்த நபர் கேப்ரியல் வார்ட்மேன், பகுதி நேரமாக போர்டபிக்கில் வாழ்பவர் என்று தெரியவந்துள்ளது. காவல்துறையினர் போல் சீருடை அணிந்து காவல்துறையினர் பயன்படுத்தும் ராயல் கனடியன் வாகனம் போன்ற ஒன்றில் வந்துள்ளார்

மக்களை கொன்றழிக்கும் இது போன்ற துப்பாக்கிச் சூடுகள் கனடாவில் மிகவும் அரிதானது. 1989-ல் நடந்த தனிமனித பைத்தியகார துப்பாக்கிச் சூட்டில் 14 பெண்கள் பலியானதையடுத்து அந்த நாட்டில் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டது.

இப்போது கனடாவில் பதிவு செய்யாமல் கைத்துப்பாக்கி வைத்திருப்பது சட்ட விரோதமாகும்.

“ஒரு நாடாக இது போன்ற தருணங்களில் நாம் ஒன்றாக இருப்போம் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்போம். நாம் சேர்ந்து பலியான குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்போம். அவர்களுக்கு உதவுவோம்” என்று கனடா தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.