தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்றும் தற்போதைய நிலையே தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24 நள்ளிரவு தொடங்கி ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது, சிறுகுறு தொழில்கள் அனைத்தும் முடங்கி உள்ளன. மக்கள் வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். வருவாய் இழப்பால் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏப்ரல் 14 அன்று தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஊரடங்கு, மே3 வரை நீட்டிக்கப்பட்டது. நடுவண் அரசின் இந்த அறிவிப்பால் அன்றாடம் பிழைப்பு நடத்தி வரும் மக்கள் சிறிய வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நடுவண் அரசு நாடு தழுவிய ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து அறிவிக்கை வெளியிட்டது. இதன்படி தொழில் நிறுவனங்கள், உழவு வேலைகள், நெடுஞ்சாலை உணவங்கள், வாகனம் பழுது பார்க்கும் கடைகள், இயந்திரம் பழுதுபார்க்கும் கடைகள், வேளாண் கருவி விற்பனை செய்யும் கடைகள், உரவிற்பனை நிலையங்கள் உள்பட முதன்மைத் தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தொழில்துறை, தொழிலாளர்கள் நடுவே வரவேற்பைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முடிவு செய்வார் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்துவரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மே 3ம் தேதி வரை தற்போதைய நிலையே தொடரும் என்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல கட்டாயத்தேவைச் சேவைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



