Show all

பேடிம் கதையின் நடப்பு அத்தியாயம்!

பேடிம் கூகுள் விளையாட்டுக் கடையில் (பிளைஸ்டோர்) இருந்து ஏன் நீக்கப்பட்டது

03,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: பேடிம் கூகுள் விளையாட்டுக் கடையில் (பிளைஸ்டோர்) இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதனால் இனி புதிதாக யாரும் பேடிஎம் செயலியை கூகுள் விளையாட்டுக் கடையிலிருந்து பதிவிறக்க முடியாது, புதுப்பிக்கவும் முடியாது.

இந்தியாவின் மிகப் பேரறிமுகமான செயலிகளில் ஒன்று பேடிஎம். இயங்கலை செல்பேசி கட்டண ஏற்றச் சேவையாக தொடங்கப்பட்ட பேடிஎம் இன்று கிட்டத்தட்ட அனைத்து முதன்மை எண்ணிமச் சேவைகளும் அடங்கிய அதீத செயலியாக உருவெடுத்திருக்கிறது. பல கோடி இந்திய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பேடிஎம்மை தங்களது கூகுள் விளையாட்டுக் கடையிலிருந்து நீக்குவதாகத் தெரிவித்திருக்கிறது கூகுள். இதனால் இனி புதிதாக யாரும் பேடிஎம் செயலியை கூகுள் விளையாட்டுக் கடையிலிருந்து பதிவிறக்க முடியாது, புதுப்பிக்கவும் முடியாது.

இது குறித்து விளக்கமளித்த ஆண்ட்ராய்டு பாதுகாப்பு மற்றும் தனித்துவப் பிரிவின் துணைத் தலைவர் சூசன் பிரே, ‘நாங்கள் இயங்கலை கேசினோ மற்றும் முறைப்படுத்தப்படாத சூதாட்ட செயலிகளை அனுமதிப்பதில்லை. ஒரு செயலியில் இது நேரடியாக நடக்காமல் அதிலிருந்து வேறொரு இணையதளத்திற்கு அனுப்பி அதில் பணம் கட்டி இது போன்ற விளையாட்டுகளில் ஆட வைத்தாலும் அவற்றை நாங்கள் நீக்கிவிடுவோம்’ என்றவர், ‘இப்படி எங்கள் கொள்கைகளை மீறும் செயலிகளின் வடிவமைப்பர்களிடம் என்ன சிக்கல் என்று தெரிவித்துவிட்டு அதை கூகுள் விளையாட்டுக் கடையிலிருந்து நீக்குவது வழக்கம். அவர்கள் சிக்கல்களை சரி செய்யும்பட்சத்தில் மீண்டும் கூகுள் விளையாட்டுக் கடையில் அனுமதிப்போம். தொடர்ந்து எங்கள் கொள்கைகளளை மீறும் செயல்களில் ஈடுபட்டால் அந்த வடிவமைப்பாளர் கணக்கை மொத்தமாக நீக்கிவிடுவோம்" என்றார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள பேடிம், மேற்கண்ட அடிப்படையில்தான் பேடிஎம் நீக்கப்பட்டிருக்கிறது. ‘விரைவில் மீண்டும் கூகுள் விளையாட்டுக் கடைக்கு வந்துவிடுவோம். உங்கள் பணத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அனைத்தும் அப்படியே பத்திரமாக இருக்கும். ஏற்கெனவே பதிவிறக்கம் செய்திருப்பவர்களுக்கு எந்தச் சிக்கலுமின்றி பேடிஎம் இயங்கும் என்று இந்த நீக்கம் குறித்துத் தெரிவித்திருக்கிறது பேடிஎம்.

பேடிம் தொடங்கிய ‘பேடிம் முதல் விளையாட்டு’ என்னும் விளையாட்டுச் சேவைதான் இந்த நீக்கத்துக்கு முதன்மைக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இது பேடிஎம் செயலியின் ஒரு பகுதியாக இருக்கிறது. கூகுள் விளையாட்டுக் கடையின்  'இயங்கலை கேசினோ மற்றும் முறையற்ற சூதாட்ட விளையாட்டுகளைத் தடுக்கும்” விதிமுறைகளை மீறியதாகச் சொல்லப்படுவதற்கு ‘பேடிம் முதல் விளையாட்டு’ காரணம் ஆகியுள்ளது. 

ஐபிஎல் தொடங்கும் இந்த நேரத்தில் இப்படி கூகுள் விளையாட்டுக் கடையிலிருந்து பேடிம் நீக்கப்படுவது பேண்டஸி விளையாட்டுக் களத்தில் கால்பதிக்க நினைத்த பேடிஎம்-க்கு பெரிய பின்னடைவு. அண்மையில்தான் ‘பேடிம் முதல் விளையாட்டு’க்கு சச்சின் டெண்டுல்கரை விளம்பரத் தூதராக பிடித்திருந்தது பேடிஎம்.
 
மிக விரைவில் இந்தச் சிக்கலுக்கு இரு நிறுவனங்களும் இணைந்து தீர்வுகாணும் என எதிர்பார்க்கலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.